அர்ப்பணிப்பிற்காகவா பிரேரணை? மஹிந்த சமரசிங்க கேள்வி

அர்ப்பணிப்பிற்காகவா பிரேரணை? மஹிந்த சமரசிங்க கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

11 Mar, 2014 | 8:49 pm

பரிபூரண நல்லிணக்கத்தின் பொருட்டு இலங்கை வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்பு காரணமாகவா, மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா சென்றுள்ள அமைச்சர், தென் கிழக்காசிய வலய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் கண்காணிப்பு மட்டத்தில் கூட்டத்தொடரில் பங்குபற்றியுள்ள நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இதன்போது இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், கடந்த ஐந்து வருடங்களில் இந்த முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய திட்டம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் விடயத்தில் அடைந்துள்ள வெற்றிகள் தொடர்பாகவும் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் எடுத்துக்கூறியுள்ளார்.

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை, பிரான்ஸ் அரசசார்பற்ற ஊழியர்களின் மரணம் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் கண்காணிப்புடன் இராணுவ விசாரணைக் குழு முன்னிலையில் இடம்பெறுகின்ற விதம் குறித்தும் இதன்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், அண்மையில் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, அதன் அதிகார வரம்பிற்குள் தெளிவான முன்னேற்றத்தை அடைந்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் கொள்கைகள் மற்றும் பயன்மிக்க செயற்பாடுகளை இலங்கை மீதான பிரேரணை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்றும் மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

தெரிவுசெய்யப்பட்ட நாடுகளை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய செயற்பாடுகள் குறித்து இலங்கை மட்டுமல்லாது ஏனைய நாடுகளும் உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளன என்பதை புரிந்துகொள்ள வேண்டியிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்ற செயற்பாடுகளை தோற்கடிப்பதற்காக பொது நோக்கத்தின் அடிப்படையில் தென் கிழக்காசிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இந்த சந்திப்பில் அமைச்சர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்