சீனா நோக்கி பயணித்த மலேஷிய விமானத்தை காணவில்லை; தொடரும் மர்மம்

சீனா நோக்கி பயணித்த மலேஷிய விமானத்தை காணவில்லை; தொடரும் மர்மம்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2014 | 10:46 pm

கோலாலம்பூரிலிருந்து சீனா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் காணாமல் போன மலேஷிய விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தொடர்பில் இதுவரை உரிய தகவல்கள் கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியான வண்ணம் உள்ளன.

குறித்த விமானம் காணாமற் போயுள்ளமை தொடர்பில் இதுவரை மர்மம் நிலவுவதாக மலேஷிய விமான சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஷாருதீன் அப்துல் ரஹ்மான் தெரிவிக்கின்றார்.

குறித்த விமானம் கடத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியையும் அவர் நிராகரிக்கவில்லை.

காணாமற் போன விமானத்தினுடைய பாகங்கள் என சந்தேகிக்கக்கூடிய விமானங்களின் பாகங்கள் இரண்டை வியட்நாம் கடற்படை அதிகாரிகள் கண்டுபிடித்திருந்ததுடன், அந்த தகவலை மலேஷிய சிவில் விமான சேவை பிரதம அதிகாரி நிராகரித்துள்ளார்.

இதேவேளை, காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

9 நாடுகள் இணைந்து கடல் மற்றும் வான் பரப்புக்களில் இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

காணாமல் போன விமானம்  தொடர்பில் மலேஷியா மற்றும் வியட்நாம் ஆகிய கடற்பரப்புக்களில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த தேடுதல் நடவடிக்கைகளுக்காக 40 கப்பல்கள் மற்றும் 34 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

குறித்த விமானம், தனது பயண பாதையை மாற்றியுள்ளமை குறித்து கிடைத்த தகவலுக்கு அமைவாக தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மலேஷிய அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பில் தமது கவலையை தெரிவிப்பதாக இன்று கூடிய மலேஷிய பாராளுமன்ற அமர்வுகளில், மலேஷிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்