கச்சத்தீவு நோக்கி உயிராபத்துமிக்க ஒரு கடல் பயணம்; வடபகுதி மீனவர் பிரச்சினையை ஆராயும் நியூஸ்பெஸ்ட்

கச்சத்தீவு நோக்கி உயிராபத்துமிக்க ஒரு கடல் பயணம்; வடபகுதி மீனவர் பிரச்சினையை ஆராயும் நியூஸ்பெஸ்ட்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2014 | 6:26 pm

இந்திய – இலங்கை மீனவர்களிடையே மாத்திரமல்ல,  இலங்கை, தமிழக  அரசுகளுக்கிடையிலும் பூதாகரமான சர்ச்சைகளை அன்றாடம் தோற்றுவித்துவரும் கச்சத்தீவு விவகாரத்தை பற்றி அறியாதவர்கள் எவருமில்லை.

கச்சதீவு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக முயற்சி எடுக்கப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பக்கத்தில்  இன்னுமொரு புள்ளியை வைத்து இந்த விவகாரம் இதுவரை காலம் தொடர்கதைப் பட்டியலில் நீடித்து செல்கின்றது.

அப்படி என்னதான் இந்த கச்சதீவில் இருக்கின்றது..? என்று  சர்வதேசமும் நீங்களும் ஆர்வம் மேலிட கேட்கும் கேள்விகள்  எங்கள் காதுகளிலும் எதிரொலிக்கின்றது.

katchathivu25 katchathivu26
கச்சத்தீவு

கச்சதீவை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ள கதைகள் ஏராளம். சிலவேளைகளில் சிறுவயதில் நாம் படித்த முகமூடி வீரர்  மாயாவி மற்றும்  தற்போதைய இளசுகளின் உள்ளம் கவர்  கதாநாயகன் ஹரிபோட்டரின் சாகசக் கதைகளையும் இந்தக் கதைகள் வென்றுவிடும்.

1974 ஆம் ஆண்டு பாரதம் இலங்கைக்கு கச்சத்தீவை  தாரைவார்த்த பின்னரும், யாருக்கு இந்த கச்சத்தீவு? எனும்  கேள்வியுடன் அரசியல் இலாபம் தேடும் பகீரதப்பிரயத்தனத்தில்  தேர்தல் காலங்களில் தமிழக அரசியல் தலைவர்கள்  விஸ்வரூபம் எடுக்கின்றனர்.

கச்சத்தீவு விவகாரம் தமிழகம் மற்றும் இலங்கையிலுள்ள  தமிழ்பேசும் சமூகத்தினரின் கவனத்தை ஈர்த்த சுவாரஸ்யம் குன்றாத ஒரு தலைப்பாகவே இற்றை வரை இருந்து வந்துள்ளது.

கச்சத்தீவுக்கு மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் குற்றவாளிக்கூண்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிறுத்தப்படுகின்றனர்.

எல்லைமீறியதாகவும் கடல் வளத்தை சூறையாடியதாகவும் இருதரப்பினர் மீதும் குற்றம்சாட்டி கைது செய்யும்  நடவடிக்கைகள் இதுவரை ஓய்ந்தபாடில்லை.

சமரசப் பேச்சுவார்த்தைககள் மேசைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதையே பெரும்பாலும் அறியமுடிகின்றது. வடபகுதி மீனவர்கள் கடலில் இருந்து வடிக்கும் கண்ணீர் தரையில் இருக்கும் அதிகாரிகளுக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் இலங்கை மீனவர்கள்  கடலில் நாளாந்தம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கச்சத்தீவை மையமாகக் கொண்டு உலாவரும் மர்மங்களுக்கு விடைகாணும் நோக்கில் நியூஸ்பெஸ்ட் கச்சத்தீவை நோக்கி பயணித்து நிலைமையை நேரில் பார்த்து உண்மைத்தன்மையை அறிய ஆவலுற்றது.

வடபகுதி மீனவர்களின் துயரங்களை பதிவு செய்யும் எங்கள் பயணம் அத்தனை இலகுவானதாக அமையவில்லை.

ஒரு சிறிய படகு, நியூஸ்பெஸ்ட் குழாமில் மொத்தம் 7 பேர், துணைக்கு கடலில் திரவியம் தேடும் மூன்று மீனவர்கள். மொத்தம் 11 பேர்.

8 மணித்தியால பயணம் அத்தனை இலகுவானது அல்ல.

katchathivu 41
எமது பயணத்திற்கு உதவிய மீனவ படகு

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலுள்ள அந்த மையப்புள்ளியில் நாங்கள் கச்சத்தீவை நோக்கி பயணித்தோம். பயணத்திற்கான துணிச்சல் தந்த மனது சிலவேளைகளில் எங்களை பீதியில் மிரளவும் வைத்தது.

வழிநெடுகில் சந்தித்த இலங்கை மீனவர்களிடம் அவர்களின் பிரச்சினைகள், சுக துக்கங்கள் தொடர்பிலும் நட்புடன் நாம்
வினவினோம், கேள்விக்கணைகளில், ஒரு சிக்கலுக்குரிய  பிரம்மாஸ்திரத்தினையும் எய்தோம், ” கச்சத்தீவை மீண்டும்  இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு தமிழக அரசு கோருகிறதே? ”  இந்த கேள்விக்கு அவர்கள் அனைவரும் அளித்த பதில் ஒன்றே.

நேர்காணல் காணொளி காண்க…

 

katchathivu 51
எங்களோடு இருந்து மீனவர்களில் ஒருவர்

இன்னும் ஒரு சில நிமிடங்களில் கச்சத்தீவை நாம் அண்மித்துவிடுவோம்  என எண்ணிய மாத்திரத்தில் திடீரென  ஒரு சிறிய ரக மீனவ படகு எம்மைக் கடந்தது. அந்த படகிலுள்ள மீனவர்களுடன் நாம் உரையாடிப்பார்த்தோம்.

கச்சத்தீவை தாண்டி இந்தியக் கடலில் சாகசம் நிகழ்த்தப்போய் ஏற்கனவே இந்தியாவினால் கைது செய்யப்பட்ட ஒருவர். ஆம் சரியான நபரிடம் ஒலிவாங்கியை நீட்டினோம். அவரது

அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

நேர்காணல் காணொளி காண்க…

 

katchathivu17இந்தியாவில் கைதான இலங்கை மீனவர்

 கச்சத்தீவை நோக்கிய பயணம் தொடரும்…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்