இலங்கையின் தமிழ் மக்களை இந்தியா ஏமாற்றிவிட்டதாக மீண்டும் குற்றச்சாட்டு

இலங்கையின் தமிழ் மக்களை இந்தியா ஏமாற்றிவிட்டதாக மீண்டும் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

09 Mar, 2014 | 8:22 pm

இலங்கையின்  தமிழ் மக்களை இந்திய மத்திய அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாக இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக இலவசமாக  ஆஜராகி ,  ராம்ஜெத் மலானி வாதாடியிருந்தார்.

இவரது இந்த பணியை பாராட்டும் வகையல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சென்னையில் நேற்று விழாவொன்றை ஏற்பாடு செய்திருந்ததாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி, இலங்கை தமிழகர்களுக்கு ராஜிவ்-ஜயவர்தன உடன்படிக்கை மூலம் மத்திய அரசாங்கம் துரோகம் இழைத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு பயிற்சிகளை வழங்கியதாக தெரிவித்த அவர் , தற்போது இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை மத்திய அரசாங்கம் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளதாக கூறியுள்ளார்

இந்திய சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனைய இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றாவிட்டால் அதனை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு முடியும் எனவும் எனவும் ராம்ஜெத் மலானி குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடிப்படையாக கொண்டே முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியோரது மரண தண்டனை இரத்துச் செய்யப்பட வேண்டும் என தாம் வாதாடியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு தமிழக முதல்வர் மேற்கொண்ட தீர்மானத்தையும் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி பாராட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்