ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு

ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு

ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2014 | 7:08 am

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளான ஏழுபேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் செயற்பாடுகளுக்கு எதிரான மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில், தமிழக அரசு தனது பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின்  முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

மேலும் இது தொடர்பில் தமிழக அரசு பதிலளிக்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பாக சட்டத்தரணி யோகேஷ் கண்ணாவால் தாக்கல் செய்துள்ள மனுவில், குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 432 இன்படி மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், அதில் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த 7 பேரின் விடுதலை தொடர்பில் மத்திய அரசின் ஆலோசனையை தமிழக அரசு கோரியதாகவும், ஆனால் மத்திய அரசு அதற்கு பதிலளிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே மத்திய அரசின் அந்த மனுவினை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அந்த பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனு தொடர்பில் முடிவெடுக்க இந்திய குடியரசுத்தலைவர் எடுத்துக்கொண்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான கால தாமதத்தை காரணம் காட்டி, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் பெப்ரவரி 18ஆம் திகதியன்று தீர்ப்பளித்திருந்தது.

பெப்ரவரி 19 ஆம் திகதி ராஜிவ் கொலைக் குற்றவாளிகளான 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. இதற்கிடையில் ராஜிவ் கொலை செய்யப்பட்டபோது அவருடன் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இந்திய உச்சநீதிமன்றத்தில்  வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மூன்று மனுக்களையும் ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் அதன் விசாரணைகள் நாளை நடைபெறும் என அறிவித்துள்ளது.

-BBC Tamil-


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்