பகடைக்காய் ஆனது உக்ரைன்: கொலைக்களமாகுமா விளைநிலங்கள்?

பகடைக்காய் ஆனது உக்ரைன்: கொலைக்களமாகுமா விளைநிலங்கள்?

எழுத்தாளர் Bella Dalima

05 Mar, 2014 | 5:47 pm

உக்ரைனில் உக்கிரமான மோதல் ஒன்றிற்கு ரஷ்யாவும் அமெரிக்காவும் தயாராகி வருகின்றன.

கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவை ஒட்டி அமைந்துள்ள தேசம் தான் உக்ரைன்.

603,628 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இத்தேசம் ஐரோப்பிய யூனியனில் இணைந்தால் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய தேசமாக இருக்கும்.

இந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் விளை நிலமாக உள்ளதால் உலகிலேயே விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியில் 3 ஆவது இடத்தில் உள்ளது உக்ரைன்.

உக்ரைன் நாட்டில் 24 மாகாணங்களும், சுயாட்சி பெற்ற கிரைமியா என்ற பகுதியும் உள்ளடக்கம்.

ukrain1

இந்த கிரைமியாவில் உள்ள ஸ்வெஸ்டோபோல் நகரில் இன்னும் ரஷ்யாவின் கருங்கடல் பிரிவு கடற்படை நிலை கொண்டிருக்கிறது.

அதாவது, சுதந்திர நாடான உக்ரைனில் முன்னர் ஆட்சி செலுத்தியவர்கள் பலரும் ரஷ்ய ஆதரவுடன் செயற்பட்டதால் தற்போதும் ரஷ்ய கடற்படை இங்கு சுதந்திரமாக வலம் வருகிறது.

சுமார் 4.6 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் உக்ரைனியர்கள். 17 சதவீதம் பேர் ரஷ்யர்கள். மேலும் பெலாரஷ்யர்கள், ருமேனியர்களும் கணிசமாக வசிக்கின்றனர்.

உக்ரைன் தான் இந்நாட்டின் தேசிய மொழி என்றாலும், சோவியத் ஆளுமையில் இருந்ததால் ரஷ்ய மொழியும் பரவலமாக பயன்பாட்டில் உள்ளது.

1783ம் ஆண்டில் கிரைமியா பகுதியை ரஷ்யா தனது நாட்டுடன் இணைத்து அதற்கு New Russia என்று பெயரிட்டது.

இதனால், ரஷ்யர்கள் உக்ரைனியர்களிடையே மோதல்கள் உக்கிரமடைந்தன.

ரஷ்ய நாட்டை ஜார் மன்னர்கள் ஆண்டபோது உக்ரைன் முழுவதுமே ரஷ்யமயமாக்கப்பட்டதோடு, உக்ரைன் மொழிக்கே கிட்டத்தட்ட தடை விதிக்கப்பட்டது.

இதன் பின்னர் உக்ரைனில் அதிக அளவில் துருக்கி மக்கள் குடியேற ஆரம்பித்தனர். 1768-1774ம் ஆண்டில் ரஷ்யா- துருக்கி இடையே போர் வெடித்தது.  அப்போது ரஷ்யாவுக்கு உக்ரைனும் கிரைமியாவும் ஆதரவு தந்தன.

இதன் பின்னர், ஐரோப்பியர்கள் அதிக அளவில் உக்ரைனில் குடியேற ஆரம்பித்தனர்.

ukraine 2

19ம் நூற்றாண்டில் உக்ரைன் கிட்டத்தட்ட ஒரு ஏழை நாடாக தரம் தாழ்ந்தது. இதனால், அந்நாட்டின் மீது ரஷ்யா அதிக அக்கரை செலுத்தவில்லை.

இந்த காலகட்டத்தில் உக்ரைனில் இருந்து மக்கள் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் குடியேற ஆரம்பித்தனர்.

சைபீரியாவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்ட பின் கிட்டத்தட்ட 17 லட்சம் உக்ரைனியர்கள் ரஷ்யாவை ஒட்டிய பகுதிகளில் குடியேற ஆரம்பித்தனர்.

இந்நிலையில், முதலாம் உலகப் போர் வெடிக்கவே அதில் உக்ரைன் நாட்டின் ஒரு பிரிவினர் ஆஸ்திரியாவுக்கு ஆதரவாகவும் இன்னொரு பிரிவினர் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் போரில் குதித்தனர்.

இந்தப் போரின்போதே ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் மக்களை போராடத் தூண்டியது ஆஸ்திரியா.

இதற்கு ஹங்கேரியும் ஆதரவு தந்தது. முதலாம் உலகப் போரின் முடிவில் ரஷ்ய, ஆஸ்திரிய ஆட்சிகள் இரண்டும் கவிழ்ந்தன.

ukraine3

1917ம் ஆண்டில் ரஷ்யப் புரட்சி ஆரம்பித்தது. இதன்போது உக்ரைனிலும் தீவிர கம்யூனிஸ சிந்தனைகளுடன் உருவான பல அமைப்புகள் உக்ரைனின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததோடு, அந்தப் பகுதிகளை தனி சுயாட்சி கொண்ட நாடுகளாக அறிவித்து, ரஷ்யாவுக்கு ஆதரவு தந்தன.

1922ம் ஆண்டு டிசம்பரில் சோவியத் யூனியனை ரஷ்யா உருவாக்கியபோது உக்ரைனை அதில் இணைத்தது ரஷ்யா.

இதையடுத்து தனது படைகளை அனுப்பிய சோவியத் யூனியன் போலந்து வசம் இருந்த பல உக்ரைன் பகுதிகளையும் கைப்பற்றியது.

ஆனாலும் மேற்கு உக்ரைனின் ஒரு பகுதி போலந்து வசமே மீண்டும் தரப்பட்டது.

 

புகோவினா பகுதியை ருமேனியாவும், கார்பதியன் ருதேனியா பகுதியை அமெரிக்கா ஆதரவுடன் செக்கோஸ்லோவாக்கியாவும் ஆக்கிரமித்தன.

இதற்கிடையே சோவியத் யூனியனிடம் இருந்து உக்ரைனை விடுவிக்க போலந்து நாட்டில் Organisation of Ukrainian Nationalists (OUN) என்ற அமைப்பு உருவானது.

இந்த அமைப்புக்கும் சோவியத் இராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில் 15 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர்.

உக்ரைன் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக உக்ரைன் மொழி மீதான தடையை சோவியத் யூனியன் நீக்கியது.

உக்ரைன் இலக்கியவாதிகளுக்கு ஆதரவு தந்தது.  மருத்துவ சேவைகள், கல்வி, சமூகப் பாதுகாப்பையும் உக்ரைன் மக்களுக்கு சோவியத் வழங்கியது. இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

உக்ரைன் தொழிலாளர்கள், கீழ் மட்ட மக்களிடையே சோவியத் யூனியனுக்கு ஆதரவு பெருகியது.

சோவியத் யூனியனின் தொழில் புரட்சியால் உக்ரைனின் பொருளாதாரமும் பெரும் வளர்ச்சி கண்டது.

ஆனால், கூட்டு விவசாயம் என்ற பெயரில் சோவியத் யூனியன் கொண்டு வந்த திட்டங்களை உக்ரைன் விவசாயிகள் ஏற்க மறுத்தனர்.

இதனால் அவர்களின் விளை பொருட்களை சோவியத் யூனியன் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டதோடு விவசாயிகளை பட்டினி போட்டுக் கொல்ல ஆரம்பித்தது.

ukraine4

மாபெரும் சோவியத் இராணுவம், உளவுப் பிரிவினரை விவசாயிகளால் எதிர்க்க முடியவில்லை. இதனால் பல இலட்சம் விவசாயிகள் பட்டினியால் இறந்தனர்.

இதற்கு எதிராக உக்ரைன் மக்கள் போராட்டத்தில் இறங்கியபோது அவர்களை இராணுவத்தைக் கொண்டு கொடூரமாக அடக்கியது சோவியத் யூனியன்.

1929-34 மற்றும் 1936-38 ஆண்டுகளுக்கு இடையே சுமார் 7 இலட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இரண்டாம் உலகப் போர் வெடிக்கவே, போலந்துக்குள் நுழைந்த ஜெர்மனியும் சோவியத் யூனியனும் அந்த நாட்டை இரண்டாகப் பிரித்துக் கைப்பற்றின.

இதில் போலந்து வசம் போன உக்ரைன் பகுதிகளை மீண்டும் உக்ரைனுடன் இணைத்தது சோவியத் யூனியன்.

இதையடுத்து சோவியத் மிரட்டலுக்குப் பணிந்து ருமேனியாவும் தன் வசம் இருந்த உக்ரைன் பகுதிகளை திருப்பித் தந்தது.

இந்நிலையில் சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைனுக்குள் ஹிட்லரின் ஜெர்மன் இராணுவம் 1941ம் ஆண்டில் புகுந்தது.

உக்ரைனின் கிவ் நகரைப் பிடிக்க முயன்ற ஜெர்மன் படைகளை சோவியத் படைகள் கடுமையாக எதிர்த்தன.

அவர்களுடன் உக்ரைன் மக்களும் இணைந்து போராடினர். ஆனால், Organisation of Ukrainian Nationalists அமைப்பினர் ஜெர்மன் படைகளுடன் இணைந்து சோவியத் படைகளை எதிர்த்தன.

இந்த நகரை ஜெர்மனியிடம் இருந்து காக்க 6 இலட்சம் சோவியத் படைகளும் உக்ரைன் மக்களும் உயிர்ப்பலி கொடுத்தனர்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் உக்ரைன்  பெரும் அழிவை சந்தித்தது.

ஹிட்லர் கொல்லப்பட்டு போர் முடிவுக்கு வந்தவுடன் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் யூனியன் பெரும் பலம் அடைந்தது.

சோவியத் அதிபர் ஸ்டாலினின் மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த நிகிதா குருசேவ், தனது நாட்டின் உக்ரைன் கொள்கையை மாற்றினார். உக்ரைனுக்கு அதிக அதிகாரங்கள் தந்தார். சோவியத் வசம் இருந்த கிரைமியா சுயாட்சிப் பகுதியை மீண்டும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் தந்தார்.

ukraine5

சோவியத் யூனியனின் பெரும் வளர்ச்சி கொண்ட பகுதியாக உக்ரைன் உருவெடுத்தது.

சோவியத் யூனியனின் மொத்த பட்ஜெட்டில் 20 சதவீதம் உக்ரைன் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டது.

சோவியத் யூனியனின் முக்கிய தொழில் கேந்திரமாக உக்ரைன் மாறியது.

சோவியத் யூனியனின் முக்கிய ஆயுத தளவாட நிறுவனங்கள், விண்வெளி ஆய்வு மையங்கள் உக்ரைனில் நிறுவப்பட்டன.

சோவியத் யூனியனின் எதிர்காலத் தலைவர்கள் பலரை உக்ரைன் உருவாக்கியது.

உக்ரைனைச் சேர்ந்த லியோனிட் பிரஸ்நேவ் சோவியத் அதிபராகவும் ஆனார்.

1990 இல் கோர்பசேவ் அதிபராக இருந்தபோது கொண்டு வந்த சீர்திருத்த, ஜனநாயக, சுதந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்து உக்ரைன் சுயாட்சி கோர ஆரம்பித்தது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றியது.

1991ம் ஆண்டில் கோர்பசேவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு இராணுவ ஆட்சி கொண்டு வர சோவியத் யூனியனின் ஒரு பிரிவு கம்யூனிஸ்ட் தலைவர்கள் முயல, அந்தப் புரட்சி தோற்றது.
இதையடுத்து சோவியத் யூனியன் கலகலக்க ஆரம்பித்தது.

அந்த சூழலைப் பயன்படுத்தி 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் திகதி தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது உக்ரைன் நாடாளுமன்றம்.

இதைத் தொடர்ந்து டிசம்பர் 1ம் திகதி நடந்த வாக்கெடுப்பில் 90 சதவீத மக்கள் தனி நாடு ஆனதை ஆதரித்து வாக்களித்தனர்.

இதையடுத்து டிசம்பர் 21ம் திகதி சோவியத் யூனியன் கலைக்கப்பட்டு உலகின் மாபெரும் வல்லரசு சிதறுண்டது.

ukraine6

பல நாடுகளும் சோவியத் யூனியனிடம் இருந்து பிரிந்து போயின.

ஆனால், சோவியத் யூனியனின் சரிவைத் துவக்கி வைத்தது உக்ரைன் தான்.

இதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.

2004ம் ஆண்டில் பெரும் முறைகேடுகளுக்கு இடையே விக்டர் யனுகோவ்ச் பிரதமரானார்.
2006 இலும் இவரே பிரதமரானார்.

ஆனால், ஆட்சி கவிழ்ந்து 2007ல் நடந்த தேர்தலில் டிமோசென்கோ பிரதமரானார். இவருக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நல்லுறவு இல்லாமல் போனதால், உக்ரைனுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தியது ரஷ்யா.

இதனால் மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாயினர்.

2010ம் ஆண்டு முன்னாள் பிரதமர் விக்டர் யனுகோவிச் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார்.

தீவிர ரஷ்ய ஆதரவாளரான யனுகோவ்ச் தனது நாட்டின் கொள்கைகளை ரஷ்யாவுக்கு சாதகமாக மாற்றினார்.

ஆனால், மக்களோ உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்கக் கோரி போராட்டங்களில் குதித்தனர்.

இதனை இராணுவத்தைக் கொண்டு அடக்கினார் யனுகோவ்ச். இதில் பலர் பலியாயினர்.
இதையடுத்து உள்நாட்டுக் கலவரம் வெடித்தது.

போராட்டக்காரர்கள் அரசுக் கட்டடங்களை ஆக்கிரமித்துக் கொள்ள, இராணுவத்தின் ஒரு பிரிவும் அவர்களை ஆதரிக்க ஆரம்பித்தது.

கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் உக்ரைன் அதிபருக்கு உதவும் வகையில் அந்நாட்டு அரசின் 15 பில்லியன் டாலர் கடன் பத்திரங்களை ரஷ்யா வாங்கும் என்றும், உக்ரைனுக்கான எரிவாயு விலையை குறைப்பதாகவும் புடின் அறிவித்தார்.

ஆனால், மக்கள் போராட்டம் தொடர்ந்து வலுக்கவே அதிபர் யனுகோவ்ச்சுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்தார் உக்ரைன் பிரதமர் அஸாரோவ்.

போராட்டக்காரர்கள் அரசுக் கட்டடங்களை விட்டு வெளியேறினால் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தார் யனுகோவ்ச். ஆனால் மக்கள் செவி சாய்க்கவில்லை.

இதையடுத்து பிப்ரவரி 21ம் திகதி எதிர்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தார் அதிபர் யனுகோவ்ச்.

விரைவில் தேர்தல் நடத்த ஒப்புக்கொண்டதோடு, அவரது அதிகாரத்தையும் உடனடியாகக் குறைக்க ஒப்புக்கொண்டார்.

யனுகோவ்ச் அரசால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமரும் எதிர்க் கட்சியின் முக்கியத் தலைவருமான யுலியா டிமோசென்கோவை உடனடியாக விடுதலை செய்து நாடாளுமன்றம் உத்தரவிட்டது.

22 ஆம் தேதி அதிபர் யனுகோவ்ச்சையே பதவி நீக்கம் செய்து உக்ரைன் நாடாளுமன்றம் உத்தரவிட்டது.

மே 25ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

சபாநாயகர் ஒலக்ஸாண்டர் டர்ச்சினோவ் இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டு, புதிய இடைக்கால அரசும் நியமிக்கப்பட்டது.

பிரதமராக அர்செனிவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அரசு உடனடியாக யுனுகோவ்ச்சை கைது செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து அவர் இரவோடு இரவாக தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் தலைநகர் கிவியில் உள்ள தனது மாளிகையில் இருந்து குடும்பத்துடன் தப்பினார்.

அவர் எங்கு தப்பிச் சென்றார் என்ற விவரம் தெரியாத நிலையில், ரஷ்யாவில் அடைக்கலம் அடைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதனையடுத்து, யனுகோவிச் தனது நாட்டில் தான் உள்ளதாகவும் அவருக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் அளிக்கப்படும் என்றும் ரஷ்யா அறிவித்தது.

ukraine7

28ம் தேதி ரஷ்ய ஆதரவுப் படையினர் உக்ரைனின் கிரைமியா பகுதியின் முக்கிய விமான நிலையங்களைக் கைப்பற்றினர்.

ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசரமாகக் கூடி நிலைமையை ஆலோசித்தது. உக்ரைனுக்குள் ரஷ்ய இராணுவம் ஊடுருவினால் கடும் விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், உக்ரைனில் உள்ள தனது கடற்படைத் தளத்தை பாதுகாக்கவே தனது படைகள் கிரைமியாவுக்குள் நுழைந்துள்ளதாக புடின் பதில் தந்துள்ளார்.

கடந்த மார்ச் 1ம் தேதி உக்ரைனுக்கு ராணுவத்தை அனுப்ப புடினுக்கு அதிகாரம் வழங்கி ரஷ்ய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றி அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கையைத் தந்துள்ளது.

புடினுடன் பராக் ஒபாமா ஒன்றரை மணி நேரம் தொலைபேசியில் பேசி கிரைமியாவில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால், உக்ரைனில் வாழும் ரஷ்ய மக்களை காக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகக் கூறி, ஒபாமாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் புடின்.
ukraine8

 

தற்போதைய நிலவரப்படி ஆயிரக்கணக்கான ரஷ்ய இராணுவத்தினர் கிரைமியாவுக்குள் ஊடுருவிக் கொண்டுள்ளனர்.

தம் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதாகவும் உலக நாடுகள் தம்மைக் காக்க வேண்டும் என்றும் உக்ரைன் பிரதமர் அர்செனிவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று உக்ரைனும் தனது இராணுவத்தை ரஷ்ய எல்லை நோக்கி குவித்து வருவதோடு, ரிசர்வ் படையினரையும் தயார் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

இதற்கிடையே உக்ரைன் கடற்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அட்மிரல் டெனிஸ் பெரேஸோவ்ஸ்கி ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படப் போவதாக அறிவித்து நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறார்.

மேலும் உக்ரைன் ஆட்சியாளர்களின் கட்டளையை நிராகரிக்குமாறும் கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ரஷ்யாவில் வரும் ஜூன் மாதம் நடக்க இருந்த ஜி-8 அதிபர்கள் மாநாட்டை அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து ஆகியவை இரத்து செய்துவிட்டன.

புடின் தனது நிலையில் பிடிவாதமாக இருப்பதால் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல், போலந்து அதிபர் கோமோரோவ்ஸ்கி என பல நாட்டுத் தலைவர்களுடனும் தொலைபேசியில் ஆலோசனைகள் நடத்த ஆரம்பித்துள்ளார் ஒபாமா.

ukraine9

இன்றைய நிலவரப்படி உக்ரைன் கடல் பகுதிக்கு தனது 2 போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது ரஷ்யா.

இவை தவிர பல ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களும் கருங்கடல் பகுதியில் நடமாட ஆரம்பித்துள்ளன.

உக்ரைன் எப்போதும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே ரஷ்யாவின் நோக்கம்.

எப்போதுமே உக்ரைன் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருப்பதா, அதை ஐரோப்பிய யூனியனுக்குள் கொண்டு வந்து அந்த நாட்டை தான் மறைமுகமாக கட்டுப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கம்.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சண்டையில் தற்போது பகடைக்காய் ஆகியுள்ளது உக்ரைன்!


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்