ஜெனீவாவில் ஜீ.எல்.பீரிஸின் உரை: ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்துள்ளது இலங்கை

ஜெனீவாவில் ஜீ.எல்.பீரிஸின் உரை: ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்துள்ளது இலங்கை

எழுத்தாளர் Bella Dalima

05 Mar, 2014 | 9:14 pm

முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர் கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில்  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் ஊடாக அவதானிக்க முடியாது போயுள்ளதாக  வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரின் மூன்றாம் நாளான இன்று இலங்கையின் உத்தியோகப்பூர்வ உரையை ஆற்றும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் உரை

“இலங்கை விவகாரம் தொடர்பில் விடுக்கப்பட்டிருக்கின்ற கோரிக்கைகள் மற்றும் உள்ளக செயற்பாடுகள் தோல்வி அடைந்ததாகக் கருதுவதனை ஆராயும் போது நாம் ஒரு விடயத்தினை சுட்டிக்காட்ட வேண்டும்.

அண்மைக்காலமாக நாம் அடைந்துள்ள முன்னேற்றங்களை இங்கு குறிப்பிடவில்லை. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இலங்கை அரசாங்கம் நெருங்கி செயற்படுகின்றது.

எனினும், துரதிர்ஷ்டவசமாக இங்கு இடம்பெறும் விடயங்களை நோக்கும் போது இலங்கை தொடர்பில் ஒவ்வொரு நாடுகளும் வெளியிடும் கருத்துக்களை ஆராயும் போது எமக்கு எந்தளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

இந்தப் பேரவையில் ஒருதலைப்பட்சமாக கருத்துக்களை வெளியிடுகின்றனர். மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த அந்த பிரேரணையை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.

அந்த பிரேரணை இந்த மாநாட்டுக்கு எதிரான ஒரு விடயம் என நாம் கருதுகின்றோம். இந்தப் பேரவை எவ்வாறு செயற்பாட்டாலும் அவரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை முரணானது.

இலங்கை அரசாங்கம் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை நன்கு ஆராய்ந்து அதனை இந்த சபையின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளோம்.

கௌரவ தலைவர் அவர்களே, நாம் இந்த இடத்தில் தெளிவாக ஒரு விடயத்தைக் கூறுகிறோம். மனித உரிமை ஆணையாளர் தமது எல்லையை மீறி ஒவ்வொரு விடயங்களையும் அடிப்படையாக வைத்து இந்த அறிக்கையில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

இந்த அறிக்கை அரசியல் பின்புலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் வரையறைக்குள் உள்வாங்கப்படவில்லை என்பதும் தெளிவாகின்றது.

அத்துடன், இந்தப் பரிந்துரைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கு முரணானவை. எனவே, இந்த அறிக்கை தொடர்பில் எமது அரசாங்கம் சார்பில் எமது கருத்துக்களை முன்வைக்கிறோம்.

கவலையுடன் சில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டும், ஆணையாளர் பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார். எனினும், அந்த விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் கேள்விக்குரியானவையே.

அதேபோன்று, அதுகுறித்து உரிய முறையில்  தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.  மனித உரிமைகள் ஆணையாளரின் இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக மனித உரிமை பேரவை கூறியுள்ளமையும் கவலைக்குரிய விடயமாகும்.

பிரச்சினைக்குரிய விடயங்களை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதனை நான் கூற விரும்புகிறேன்.

இலங்கை அரசாங்கம் ஆணையாளரின் இந்த அறிக்கையை நிராகரிக்கின்றது என்பதனை இந்த சபையில் மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறேன்.

30 வருடகால யுத்தத்தின் பின்னர் கடந்த 5 வருடங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்படவில்லை என்பதனை இந்த செயற்பாடுகளின் ஊடாக நாம் காண்கிறோம்.”

இதேவேளை, பேரவையின் 2ஆம் நாளான நேற்று ஐக்கிய நாடுகளுக்குள் தடை செய்யப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட  சந்திப்பொன்றில் இலங்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான அமெரிக்காவின் செயலாளர், சேரா சிவோல் தெரிவித்த கருத்துக்கள்:

“2012 ஆம் ஆண்டு மற்றும் இந்த வருடத்தில் மனித உரிமைகள் பேரவையானது இலங்கையில் இடம்பெற்ற
சிவில் யுத்தத்தின் போது உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை
ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இதுவரை அந்த அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. இந்த பின்புலத்திலேயே இந்த வருடமும்
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அதன் அவதானத்தை செலுத்தியுள்ளது. அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும்
சிறுபான்மை மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்துமாறு ஆணையாளரின் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்காகவே  அந்தப் பிரேரணையை முன்வைத்துள்ளனர்.”

இதேவேளை, அமெரிக்கா உள்ளிட்ட சில முன்னணி நாடுகள் இணைந்து முன்வைத்துள்ள வரைபை முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார்.

BBCக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு ஒருசில வருடங்கள் மாத்திரமே கடந்துள்ள நிலையில், இலங்கை  தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு மனித உரிமைகள் பேரவை வேண்டுவது முற்றாக அநீதியான செயல் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வரைபு,  ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை மீறும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா,  பிரித்தானியா உள்ளிட்ட 5 நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்  என்ற வரைபு தொடர்பில் உத்தியோகப்பற்றற்ற முறையிலான பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்  நவநீதம்பிள்ளையினால் 18 பக்கங்களைக் கொண்ட இலங்கை தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சர்வதேச பொறிமுறை  அவசியம் என்பதே  அந்த அறிக்கையின் உள்ளடக்கமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்