யுக்ரேனில் தமது நாட்டு படையினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பர் – ரஷ்யா

யுக்ரேனில் தமது நாட்டு படையினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பர் – ரஷ்யா

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 9:48 pm

யுக்ரேனில் தமது நாட்டுப் படையினர் தொடர்ந்து நிலைகொண்டிருப்பார்கள் என ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அரசியல் நிலைமைகள் வழமைக்கு திரும்பும் வரை தமது நாட்டு நலன்கள் மற்றும் பிரஜைகளை பாதுகாக்கும் வகையில் அவர்கள் யுக்ரேனில் இருப்பார்கள் எனவும் ரஷ்யா கூறியுள்ளது.

அதிதீவிர தேசியவாத அச்சுறுத்தலில் இருந்து மனித உரிமைகளை தமது நாடு பாதுகாக்கும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோ சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் யுக்ரேனின் க்ரைமியா பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை ரஷ்யப் படையினர் தொடர்ந்தும் தம்வசம் வைத்துள்ளனர்.

இதனிடையே இராணுவத் தலையீட்டை எதிர்கொள்வதற்கு முழுமையான இராணுவக் குவிப்பிற்கு யுக்ரேனின் இடைக்கால அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

விக்டர் யனுகோவிச் யுக்ரேனின் ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர். படையினரைப் பயன்படுத்த ரஷ்யப் பாராளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரின் அடிப்படை சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் வெற்றிபெறுவதற்கு முயற்சிப்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவில் சந்திக்கவுள்ளார்.

மேற்குலக நாடுகளின் தடை மற்றும் பகிஷ்கரிப்பு தொடர்பான அச்சுறுத்தல்களுக்கும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

எனினும் க்ரைமியா பிராந்தியத்தை ஆக்கிரமிக்கும் முயற்சி தோல்வி அடையும் என யுக்ரேனின் இடைக்காலப் பிரதமர் எச்சரித்துள்ளார்.

தற்போது இராணுவ ரீதியான நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும், சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்பையே எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்