சிறையில் உயிரிழந்த கோபிதாசின் மரணம் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் –  இறுதிக்கிரியையில் ஆர்ப்பாட்டம்

சிறையில் உயிரிழந்த கோபிதாசின் மரணம் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் – இறுதிக்கிரியையில் ஆர்ப்பாட்டம்

சிறையில் உயிரிழந்த கோபிதாசின் மரணம் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் – இறுதிக்கிரியையில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 11:13 am

கொழும்பு மகசீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற விஸ்வலிங்கம் கோபிதாசின் மரணம் குறித்து நீதியான சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பருத்தித்துறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

விஸ்வலிங்கம் கோபிதாசின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றபோது இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகள்   தொடர்பாகவும் இந்த ஆர்ப்பாட்டதில் கண்டனம் வெளியிடப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமசமாஜ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும், காணாமல் போனோரின் நலன்களுக்கான அமைப்புகள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பு போன்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோபிதாஸின் மரணம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், அரசியல் கைதிகள் பயங்கரவாதிகளல்ல, அவர்கள் எம் பிள்ளைகள் போன்ற கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்களினால் எழுப்பப்பட்டன.

இதேவேளை, விஸ்வலிங்கம் கோபிதாசின் இறுதிக்கிரியைகள் பருத்தித்துறையில் நேற்று நடைபெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்