ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம் (Video)

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம் (Video)

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 8:41 pm

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 அளவில் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது.

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தில், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மற்றும் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தலைமையில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிரதான கூட்டத்தொடர் தவிர்ந்த ஏனைய சந்திப்புக்களிலும் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றல், பயங்கரவாத சட்டத்தை நீ்க்குதல் உள்ளிட்ட 74 விடயங்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் இந்த கூட்டத்தொடரில் சமர்பிக்கப்படவுள்ளது.

இதனைத்தவிர, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் ஆதரவுடன் இலங்கை தொடர்பான பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரேரணை ஊடாக இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தலைமை வகிக்கின்றார்.

இதனைத்தவிர, அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார செயலாளர் ஷேனுகா செனவிரத்ன ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

ஜெனீவாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

இன்று ஆரம்பாகும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்