ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 7:50 am

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஆரம்பமாகும் இந்த கூட்டத் தொடர் எதிர்வரும்  28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

ஜெனீவா நேரப்படி இன்று முற்பகல் ஒன்பது மணிக்கு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தலைமையில் இம்முறை கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

47 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் நல்லிணக்க மேம்பாடுகள் மற்றும் பொறுப்புகூறல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்வைத்துள்ள அறிக்கை குறித்து இந்தக்கூட்டத் தொடரின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையின் அவசியத்தை அவர் தனது அறிக்கையினூடாக வலியுறுத்தியுள்ளார்.

எனினும் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இதேவேளை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமது நாடு தீர்மானம் ஒன்றை முன்வைக்கும் என அமெரிக்க இராஜங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக பிரித்தானியா அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின்  22 ஆவது கூட்டத்தொடரில்  இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்திருந்தது.

இந்த நிலையில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜங்கச் செயலாளர் நீஷா பிஸ்வால் எதிர்வரும் செவ்வாயக்கிழமை இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதேவேளை, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழு ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்

அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாளை மறுதினம் மனித உரிமைகள் பேரவையில் உரைநிகழ்த்தவுள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்தவுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை இம்மாதம் 26 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்