ராஜீவ் வழக்கு: உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி விடுவிக்க முடியாது (வழக்கறிஞர் விசேட செவ்வி)

ராஜீவ் வழக்கு: உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி விடுவிக்க முடியாது (வழக்கறிஞர் விசேட செவ்வி)

ராஜீவ் வழக்கு: உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி விடுவிக்க முடியாது (வழக்கறிஞர் விசேட செவ்வி)

எழுத்தாளர் Bella Dalima

21 Feb, 2014 | 5:37 pm

இந்திய உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி எவராலும் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அதற்கு தமிழக அரசு கட்டுப்பட வேண்டும் எனவும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வாதிட்ட சட்டத்தரணிகளில் ஒருவரான எஸ்.துரைசாமி தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளின் விடுதலை தொடர்பில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ள நிலையில், மார்ச் மாதம் 6ஆம் திகதி வரை அவர்கள் யாரும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இருந்து நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.

அந்த செவ்வியின் முளுவிபரம் பின் வருமாறு;

கேள்வி : ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

பதில் : அந்த அதிகாரம் தமிழக அரசுக்கு மட்டும் தான் இருக்கின்றது. மத்திய அரசுக்கு இது தொடர்பில் எந்த அதிகாரமும் இல்லை. தமிழக அரசு எடுத்த நடவடிக்கை நூற்றுக்கு நூறு வீதம் சரியான நடவடிக்கை. அதுவே சட்ட ரீதியான நடவடிக்கை. மத்திய அரசாங்கத்திடம் அவர்கள் ஆலோசனைகளை மட்டும் தான் பெற வேண்டும். இவர்களை நாங்கள் விடுவிக்க போகின்றோம். உங்களுக்கு இதில் ஏதாவது ஆட்சேபனை இருக்கின்றதா? என்று மட்டும் தான் கேட்க வேண்டும்.  மத்திய அரசிற்கு ஆட்சேபனை இருந்தாலும், அந்த ஆட்சேபனையை நிராகரித்துவிட்டு, அவர்களை விடுதலை செய்வதற்கான முழு அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கின்றது.

கேள்வி : எனினும், தமிழக அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக இந்திய உயர்நீதிமன்றத்தினை மத்திய அரசு நாடியிருக்கின்றது. மத்திய அரசும் தமிழக அரசின் தீர்மானத்திற்கு இடைக்கால தடை உத்தரவை வழங்கியிருக்கின்றது. இந்தத் தடை உத்தரவை மீறி அவர்கள் விடுவிக்கப்படுவார்களா?

பதில் : உச்ச நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதற்கு அனைவரும் கட்டுப்பட்டு தான் ஆகவேண்டும். அதை மீறி நடவடிக்கை எடுக்க முடியாது. எனினும், உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை மட்டும் தான் கொடுத்திருக்கின்றது. அதாவது, மார்ச் மாதம் 6ஆம் திகதி வரைக்கும் நீங்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வேண்டாம்.  சட்ட பிரச்சினையை பார்த்துக்கொண்டு அதற்கு பிறகு  நடவடிக்கை எடுக்கலாம் – அப்படி என்று ஒரு இடைக்கால உத்தரவு தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மார்ச் மாதம் 6ஆம் திகதி வரை இவர்கள் யாரும் சிறையிலிருந்து விடுதலை ஆக மாட்டார்கள்.

கேள்வி: இந்த நிலையில் தமிழக அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறாக இருக்கும்?

பதில்:  நீங்கள் போட்ட இடைகால உத்தரவு தவறான உத்தரவு, அது சட்டத்திற்கு மீறிய உத்தரவு, இது தொடர்பில் கேட்பதற்கான அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு இல்லை,  எனவே இடைக்கால உத்தரவு கொடுத்திருக்கக் கூடாது,  அதை இரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து ஒரு மனு தாக்கல் செய்வார்கள்.  மார்ச் 6ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வரும் போது அந்த மனு தாக்கல் செய்யப்படும்.

கேள்வி : மார்ச் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமா?

பதில்: அதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

கேள்வி: இந்திய உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்?

பதில்:  இந்திய சட்டத்தின் படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து,  தீர்ப்பு கொடுக்கின்ற வரை இந்த இடைக்கால தடை  நீடித்துக் கொண்டே இருக்கும். மார்ச் மாதம் 6ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வருகின்றது. அன்றைய தினமே அந்த வழக்கை எடுத்துக்கொள்ளலாம். அதற்கு பிறகு கூட திகதி ஒத்தி வைக்கப்படலாம். அது வரைக்கும் இந்த இடைகாலத் தடை நீடிக்கும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்