ரயில் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு; ரயில் சேவைகள் சில இரத்து

ரயில் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு; ரயில் சேவைகள் சில இரத்து

ரயில் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு; ரயில் சேவைகள் சில இரத்து

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2014 | 9:32 am

ரயில் சாரதிகளில் ஒரு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிபகிஷ்கரிப்பை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிடுகின்றது.

எவ்வாறாயினும், சாரதிகளில் இன்னுமொரு தரப்பினர் சேவைக்கு சமூகமளிப்பதால், ரயில் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர். ரத்னாயக்க தெரிவித்தார்.

இதுதவிர ஓய்வுபெற்ற ரயில் சாரதிகளையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆயினும் இன்று அதிகாலை முன்னெடுக்கப்படவிருந்த ஒருசில ரயில் சேவைகளை இரத்து செய்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.

புத்தளம் – சிலாபம் மார்க்கத்திலான 2 ரயில்களும், பிரதான மார்க்கத்திலான இரண்டு ரயில்களும், களனிவெளி மார்க்கத்தில் ஒரு ரயிலும் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரயில்வே சாரதிகளின் பணிபகிஷ்கரிப்பை எதிர்கொள்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உப தலைவர் எல்.ஆர்.ஏ. விமலரத்ன தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சின் கண்காணிப்பு அதிகாரி பதவியிலிருந்து தமது சங்கத்தின் தலைவர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து “லொகோ மோடிவ்” இயக்குநர் பொறியியலாளர் சாரதிகள் சங்கம் இந்த பணிபகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தது.

ஆயினும், இந்த பணிபகிஷ்கரிப்பிற்கு 26 ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ரயில்வே ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சம்பத் ராஜித தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும், தமது பணிபகிஷ்கரிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதாக “லொகோ மோடிவ்” இயக்குநர் பொறியியலாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பதவிநீக்கம் செய்யப்பட்ட தமது தலைவருக்கு மீண்டும் அந்த பொறுப்பு வழங்கப்பட வேண்டுமென சங்க உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், இந்த விடயம் குறித்து அறிந்துகொள்வதற்காக சங்கத்தின் தலைவருடன் தொடர்புகொள்வதற்கு நியூஸ்பெஸ்ட் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

இந்த பணிபகிஷ்கரிப்பு காரணமாக இன்று காலையும் ரயில் சேவைகளை வழமைபோன்றே முன்னெடுப்பதில் இடையூறுகள் ஏற்படலாம் என கொழும்பு கட்டுப்பாட்டு நிலையம் கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்