மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மாட்டேன் – சீ.வி.விக்னேஸ்வரன்

மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மாட்டேன் – சீ.வி.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2014 | 5:56 pm

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரேத்தே லேசெனை யாழ்ப்பாணத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

இதன் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலை குறித்தும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஜெனீவாக் கூட்டத்தொடரில் வடக்கின் முதலமைச்சர் என்ற ரீதியில் கலந்துகொள்வீர்களா, என்று ஊடகவியலாளர்கள் இதன் போது கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், 

[quote]ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மாட்டேன், செல்லவேண்டிய அவசியமுமில்லை. நான் வடக்கின் நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளை கவனித்து வருகின்றேன். அரசியல் நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்த்து வருகின்றார்கள். அவர்கள் செல்வார்கள். பெண்கள் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன[/quote] எனத் தெரிவித்தார்.

இதேவேளை, அண்மையில் முதலமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என கூறப்படும் விடயம்  குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதன்போது, அவர் தெரிவித்ததாவது;

[quote]விசாரணைக்குழு நான் பேசியதைப் பற்றித்தானே? நான் வாசித்தது அப்படியே இருக்கிறது. நான் அதை அப்படியே அனுப்புவேன். அதில் சட்டத்திற்கு முரணான ஏதாவது இருந்தால் நடவடிக்கை எடுக்க முடியும். நான் எதையும் எழுதியே வாசிப்பேன்.  அது சட்டத்திற்கு முரணாக இருந்தால் வேண்டிய நடவடிக்கையை எவரும் எடுக்கலாம்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்