அரசால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக வழங்கப்பட்ட காசோலைகளில் மோசடி?

அரசால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக வழங்கப்பட்ட காசோலைகளில் மோசடி?

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2014 | 9:13 pm

ஒலுவில் துறைமுக நிர்மாணத்திற்காக பொது மக்களின் காணிகள் 2008 ஆம்  ஆண்டு சுவீகரிக்கப்பட்டன.

இந்த காணிகள் துறைமுக அதிகார சபையினால் வெளியிடப்பட்ட  வர்த்தமானி அறிவித்தலுக்கமையவே கையகப்படுத்தப்பட்டன.

46 பேருக்கு சொந்தமான சுமார் 72 ஏக்கர் காணிகள் இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 32 பேருடைய காணிகளுக்கான பெறுமதிகளை அரச பெறுமதி மதீப்பீட்டுத் திணைக்களம் மதிப்பீடு செய்துள்ளது.

மிகுதி 14 பேருடைய காணிகளுக்கான மதிப்பீடுகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான அரச தொகை மதிப்பீடு அதிகமானது
எனத் தெரிவித்து காணிகளுக்கான இழப்பீட்டுப் பணத்தினை வழங்காமல் 05 வருடங்களாக
துறைமுகங்கள் அதிகார சபை இழுத்தடிப்பு செய்தது.

இந்த நிலையில், 2013ஆம் ஆண்டு காணி அமைச்சின் செயலாளரினால் இந்த விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இதற்கிணங்க, இரண்டு கட்டங்களின் கீழ் காணிகளை இழந்தவர்களுக்கான நட்ட ஈட்டை
வழங்க ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

எவ்வாறாயினும், ஒலுவில் துறைமுக திறப்பு விழாவுக்கு முன்னர் முதற்கட்ட கொடுப்பனவை
வழங்கவும் இரண்டாம் கட்ட கொடுப்பனவை பேச்சுவார்த்தையொன்றின் மூலம் தீர்மானிப்பதாகவும் முடிவுசெய்யப்பட்டது.

இதற்கமைய, 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத திறப்பு விழாவில் இருவருக்கு ஜனாதிபதியினால் காசோலைகள் வழங்கப்பட்டன.

 

இந்தக் காசோலைகள் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் வங்கிக் கணக்குக்குரியவை.

காணிகளை இழந்தவர்களுக்கான நட்டஈட்டுப் பணத்தினை இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை
அட்டாளைச்சேனை பிரசேதச செயலகத்தின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியிருந்தது.

அதற்கிணங்க, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் இரண்டு கசோலைகளைத் தயார் செய்து அதனை  ஜனாதிபதியின் கரங்களினால் கையளிப்பு செய்து முடித்தனர்.

மேற்படி காசோலைகள் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியிடப்பட்டு வழங்கப்பட்டவை.

இதன் மூலம் இலட்சக்கணக்கான பணம் காணி உரிமையாளர்களின் பெயருக்கு
வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், வழங்கப்பட்ட காசோலைகளைத்  தாமதித்து வங்கியில் வைப்பிலிடுமாறு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறைக் கேட்டிருந்தார்.

பொறுமையிழந்த காணி உரிமையாளர்கள் இதனை வைப்பிலிட முயற்சித்த  வேளையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் குறித்த காசோலைகளை  இடைநிறுத்துமாறும் கொடுப்பனவுகளை வழங்க வேண்டாம் எனவும் வங்கிக்கு  அறிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்  இதனைத் தடுப்பதற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு
மக்கள் கடிதம் மூலமாக வினவிய போதும் அதற்கும் பொறுப்பான பதில்  இதுரையில் வழங்கப்படவில்லை.

எவ்வாறாயினும், ஜனாதிபதியினால்  வழங்கப்பட்ட காசோலைகளை பெற்றுக்கொண்டவர்களுக்கும் இதுவரையில் பணம் போய்ச்சேரவில்லை.

ஒலுவில் துறைமுக நிர்மாணத்திற்காக தமது காணிகளை தாரைவார்த்த இந்த
மக்களுக்கு இன்றுவரையில் நட்டஈட்டுப் பணம் வழங்கப்படாமை மக்கள் மத்தியில்  விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த செயற்பாட்டின் மூலம் ஏதோ ஒரு மூலையில் மோசடி இடம்பெற்றுள்ளதா, என்ற கேள்வி எழுகின்றது.

ஒட்டுமொத்தத்தில் இந்த மக்கள் தற்போது இரண்டும் கெட்டான் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது மட்டும் உண்மை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்