மாங்குளம் வாகன விபத்து – உயிரிழந்தவர்களின் பெயர் விபரம்

மாங்குளம் வாகன விபத்து – உயிரிழந்தவர்களின் பெயர் விபரம்

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2014 | 4:10 pm

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய முறிகண்டி கோவிலுக்கு அருகில் ஏ-9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியைச் சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 வயதான சுஜிகரன் பதுமன், மற்றும் 7 வயதான சுஜிகரன் யஷ்மித்தா ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களது தாயாரான 30 வயதான சுஜிகரன் சர்மிலா காயமடைந்துள்ளார்.

இதேவேளை, இந்த விபத்தில் சின்னத்துரை பரமேஸ்வரி (வயது 79), அவரது மகனான சின்னத்துரை சிவனேஸ்வரன் (வயது 43), சோதிலிங்கம் மதீலன் (வயது 35) ஆகியோரும் உயிரிந்துள்ளனர்.

சோதிலிங்கம் மதீலன் ஜேர்மனியிலிருந்து விடுமுறையில் இலங்கைக்கு வந்திருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த இவர்கள் பயணித்த வேன் நிறுத்தி வைக்கப்ட்டிருந்த டிப்பர் ஒன்றுடன் பின்புறமாக மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் நியூஸ் ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்