இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோருகிறோம் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோருகிறோம் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2014 | 10:16 pm

தேசிய பொறிமுறை உரிய வகையில் முன்னெடுக்கப்படாவிடின் இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் சர்வதேச விசாரணையைக் கோருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

நியூஸ்பெஸ்டிற்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றெங்கின் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

கேள்வி : உங்களது பிரதமர்  இலங்கையில் ​பொதுநலவாய அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொண்ட போது நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தார்.

பதில் : உண்மையாகவே உள்நாட்டில் தேசிய விசாரணை உரிய வகையில் இடம்பெறாவிடின் பிரித்தானிய அரசாங்கம் ஜெனீவாவில் சர்வதேச விசாரணையைக் கோரி நிற்கும்.

​கேள்வி :  நாட்டுக்கு எதிரான சர்வதேச பிரச்சினைக்கு இடமளிக்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. ஆகவே, உங்கள் நாட்டு அரசாங்கம் எவ்வாறு இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கும்?

பதில் :  இந்தப் பிரச்சினை தொடர்பில் முதலில் தெளிவாகவும் நட்பு ரீதியாகவும் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை முன்னெடுக்க வேண்டும். வட அயர்லாந்தின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால் ருவாண்டா மற்றும் சியேராலியோன் போன்ற நாடுகளில் சுயாதீன விசாரணைகள் இடம்பெற வேண்டும்.

நீண்டகால நல்லிணக்கம் மற்றும் உறுதியான ஸ்திரத்தன்மை போன்ற விடயங்களுடன் சிந்தித்து அரசாங்கம்  இது தொடர்பில் செயற்பட வேண்டும். அதேபோன்று, சர்வதேச பொறிமுறையொன்றின் ஊடாக இந்த பிரச்சனையில் தலையீடுகளை மேற்கொள்ள ஏனைய நாடுகளால் முடியும். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தான் இது தொடர்பில் கடந்த இரண்டு தடவையும் ஆதரவாக பிரித்தானியா வாக்களித்து. இந்த விவாதம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

கேள்வி: டோனி பிளேயரின் நிர்வாகத்தில் அரசாங்கம் பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தில் தீவிரமாக செயற்பட்டது. இதன் போது, பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதா?

பதில் :  ஆம், எமது இராணுவம் பாரியளவில் குற்றங்கள் புரிந்துள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் செயற்பட்டோம் . அதேபோன்று, உள்ளக தேசிய விசாரணையொன்றும் முன்னெடுத்தோம். இதற்கு அமைவாக ஆப்கானிஸ்தானில் எமது நாட்டு இராணுவம் புரிந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தோம். இவ்வாறு தேசிய விசாரணைகள் முன்னெடுக்கப்படாவிடின் இந்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறை முன்னெடுக்கப்படும்.

கேள்வி:  இலங்கைக்கு எதிரான தடைகளுக்கு பிரித்தானியா ஆதரவு வழங்குமா?

பதில் :  இதனை யாரும் செய்ய மாட்டார்கள். எனது அறிவிற்கு எட்டிய வகையில் சர்வதேச சமூகம் கேள்விகளை எழுப்புவது இலங்கைக்கு  எதிராக தடைகளை விதிக்க அல்ல.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்