பிரதான கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல் (காணொளி)

பிரதான கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல் (காணொளி)

எழுத்தாளர் Bella Dalima

05 Feb, 2014 | 9:45 pm

மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களுக்காக, பிரதான கட்சிகள் சில இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தன.

சுயேட்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவு பெற்றதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

மேல் மாகாண சபைக்காக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வேட்பு மனு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட குழுவினரினால் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் இந்த வேட்பு மனுத் தாக்கல் இடம்பெற்றது.

ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வேட்பு மனு, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் ஜயந்த கெட்டகொடவினால் தாக்கல் செய்யப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, களுத்துரை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தது.

முன்னாள் மாகாண அமைச்சர் ஜகத் அங்ககே மற்றும் அமைச்சர் குமார வெல்கம ஆகியோரின் தலைமையில் இந்த வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

களுத்துரை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை மக்கள் விடுதலை முன்னணி இன்று தாக்கல் செய்தது.

ஜனநாயகக் கட்சி சார்பில், கட்சியின் குழுத் தலைவர் உபாலி சிரிலால் சுரவீர உள்ளிட்ட குழுவினர், களுத்துரை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தனர்.

களுத்துரை மாவட்டத்தில் ஜனசெத முன்னணியின் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு, முன்னணியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் உழவு இயந்திரத்தில் வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கம்பஹா மாவட்டத்தில் இன்று முதன் முறையாக வேட்பு மனுவை ஜனநாயக் கட்சி தாக்கல் செய்தது.

கம்பஹா மாவட்டத்தின் குழுத் தலைவர் அநுருத்த லேகம்கே உள்ளிட்ட குழுவினர் இந்த வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் மற்றும் கம்பஹா மாவட்ட குழுத் தலைவர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட குழுவினர் கம்பஹா மாவட்டத்திற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்டத்திற்கான வேட்பு மனு பட்டியல், மாவட்ட குழுத் தலைவர் ஹர்ஷன ராஜகருணா உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில், கம்பஹா மாவட்டத்திற்கான வேட்பு மனு, மாவட்ட குழுத் தலைவர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட குழுவினரினால் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது, கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், பேரணியாக வருகை தந்தமை விசேட அம்சமாகும்.

தென் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்ற, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மாவட்ட செயலகத்தில் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இதன்படி, காலி  மாவட்டத்திற்கான ஜனநாயகக் கட்சியின் குழுத் தலைவர் பத்மசிறி டி சில்வா இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நலின் ஹேவாகே, மக்கள் விடுதலை முன்னணிக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மாத்தறை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை மக்கள் விடுதலை முன்னணி இன்று தாக்கல் செய்தது.

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துந்னெத்தி மற்றும் குழுத் தலைவர் ஜனதாஸ கித்துலகொட ஆகியோர் தலைமையில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஜனநாயகக் கட்சியின் மாத்தறை மாவட்ட குழுத் தலைவர் ஜனித் விபுலகுண உள்ளிட்ட குழுவினரினால், வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மாத்தறை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை ஐக்கிய தேசியக் கட்சி இன்று தாக்கல் செய்தது.

இதன்போது கட்சியின் மாவட்ட குழுத் தலைவர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்திருந்தனர்.

தென் மாகாண சபைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று காலை வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தது.

ஐக்கிய தேசிய கட்சியின், ஹம்பாந்தோட்டை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட குழுவினர், அந்த மாவட்டத்திற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்