புல்மோட்டை மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்கிறது

புல்மோட்டை மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்கிறது

புல்மோட்டை மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 1:39 pm

திருகோணமலை புல்மோட்டை மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொக்கிளாய் களப்பு பகுதியில் சுறுக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமைக்கு கடற்றொழில் திணைக்களத்தால் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

புல்மோட்டை மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பிரிவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

புல்மோட்டை மீனவர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தமையால் அவர்களுக்கு மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக அமைச்சின் ஊடக செயலாளர் தயாசிறி நரேந்திர ராஜபக்ஸ தெரிவித்தார்.

இந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான மாற்று நடவடிக்கையை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கான அனைத்து உதவிகளும் கடற்றொழில் அமைச்சினால் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் கொக்கிளாய் களப்பு பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றமைக்கு கடற்றொழில் அமைச்சிலிருந்து அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும்   அமைச்சின் ஊடகப் செயலாளர்  திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதேவேளை தமது களப்பு பகுதியில் பலவருட காலமாக தடை செய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட புல்மோட்டை மீனவர்களுக்கு தடை விதித்தமைக்காக அமைச்சுக்கு நன்றி தெரிவித்து கொக்கிளாய் மீனவர்கள் இன்று கவணயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்