சுஜாத்தா மேத்தா உள்ளிட்ட குழு வவுனியா, கிளிநொச்சிக்கு விஜயம்

சுஜாத்தா மேத்தா உள்ளிட்ட குழு வவுனியா, கிளிநொச்சிக்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2014 | 7:51 pm

இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் விசேட செயலாளர் சுஜாத்தா மேத்தா உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி மற்றும் வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்துள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தின் ஒரு தொகுதி வீடுகள் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்திய வெளிவிவகார அமைச்சின் விசேட செயலாளர் சுஜாத்தா மேத்தா தலைமையிலான குழுவில், யாழ். இந்திய துணைத் தூதுவர் வி.மகாலிங்கமும் இணைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 8,500 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதில் 1,700 வீடுகள் இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். இந்திய துணைத் தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளளார்.

இதேவேளை, இந்திய பிரதிநிதிகள் குழு இன்று வவுனியாவுக்கும் விஜயம் செய்தது.

இதன்போது வவுனியா பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளை இந்திய பிரதிநிதிகள் சந்தித்ததுடன்  வவுனியாவில் உள்ள இந்திய வீட்டுத் திட்டங்களையும் பார்வையிட்டனர்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டத்திற்கான மூன்றாம் கட்ட பயனாளிகள் தெரிவு இடம்பெறும் நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கப்படாது அமைச்சர் ஒருவரின் சிபாரிசில் வீடுகள் வழங்கப்படுவதாக தெரிவித்து நேற்று வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்