அமைச்சரின் நிலைப்பாட்டிற்கு எதிராக அதிகாரிகள் செயற்பட்டுள்ளனரா?

அமைச்சரின் நிலைப்பாட்டிற்கு எதிராக அதிகாரிகள் செயற்பட்டுள்ளனரா?

அமைச்சரின் நிலைப்பாட்டிற்கு எதிராக அதிகாரிகள் செயற்பட்டுள்ளனரா?

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2014 | 10:27 pm

விமர்சனத்திற்குள்ளான ஐ.சி.சி-யின் புதிய சட்டமூலம் தொடர்பாக பேரவையின் நிறைவேற்றுக் குழுவில் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐ.சி.சி-யின் புதிய நிர்வாக வியூக சட்டமூலத்திற்கு எதிர்ப்புகள் வலுவடைந்துள்ளன.

இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் ஐ.சி.சி-யின் உத்தேச சட்ட மூலத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிதி மற்றும் வர்த்தகப் பிரிவு தயாரித்துள்ளது.

அதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மனித சங்கிலி அமைத்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் கலந்துகொண்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்தன.

ஐ.சி.சி-யின் சட்டமூலத்திற்கு கிரிக்கெட் நிர்வாகம் ஆதரவோ அல்லது எதிர்ப்பையோ தெரிவிக்குமிடத்து பொதுமக்களின் நிலைப்பாட்டை கருத்திற்கொள்ள வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அனுருத்த பிரதீப் தெரிவித்தார்.

புதிய சட்டமூலத்தின் ஊடாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகம் நூதனமாக சர்வாதிகார போக்கிற்கு மீண்டும் கொண்டு செல்லப்படுவதாகவே உள்ளது என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவரான மைக்கல் அதர்டன் கூறினார்.

அந்த சட்டமூலத்தை பகிரங்கமாக விமர்சித்துள்ள மைக்கல் அதர்டன்,  தீர்மானங்களை எடுக்கும்போது அரசியல், பழங்குடி மற்றும் தனித்துவம் ஆகியன சகல வகையிலும் அதற்கு தடை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

நியூஸிலாந்து முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவரான மார்ட்டின் க்ரோவும் ஐ.சி.சி-யின் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் குறித்த சட்டமூலத்தை ஆதரித்துள்ள நிலையில், அவர் அதனை எதிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் அலன் ஐசக்கிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள மார்ட்டின் க்ரோ, புதிய சட்டமூலத்தில் ஐ.சி.சி-யின் நிர்வாக இறைமை இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரமே பெற்றுக்கொடுக்கப்படுகிறதென சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.சி.சி-யின் புதிய சட்டமூலத்திற்கு நாடு என்ற ரீதியில் எதிர்ப்பு தெரிவிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த 20 ஆம் திகதி தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சரின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் செயற்பட்டுள்ளனரா?

அவ்வாறு செயற்படுவார்களாயின் அதன் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சரைவிட இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளே அதிகாரம் மிக்கவர்கள் என்றா நிரூபணமாகும்?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்