எக்பேர்ட் தமிழ் வித்தியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்

எக்பேர்ட் தமிழ் வித்தியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்

எக்பேர்ட் தமிழ் வித்தியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2014 | 1:41 pm

இறக்குவானை, சூரியகந்த எக்பேர்ட் தமிழ் வித்தியாலத்திற்கு முன்பாக பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து இன்று காலை முதல் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துவருகின்றனர்.

தமது பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமது பிள்ளைகளின் கல்வித் தேவையினை பூர்த்தி செய்வதற்குத் தேவையான போதியளவான ஆசிரியர்களை நியமிக்கும் வரை இந்த ஆர்ப்பாட்டம் தொடருமென பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.

சூரியகந்த எக்பேர்ட் தமிழ் வித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் வீ.பாஸ்கரனிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இதனிடையே மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் நோக்கில் தமது வேண்டுகோளுக்கு அமைய பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டார்.

இறக்குவானை சூரியகந்த எக்பேர்ட் தமிழ் வித்தியாலத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் எம்பிலிபிட்டி வலயக் கல்வி பணிப்பாளர் ஆரியபாலவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் பொருட்டு கடந்த 23 ஆம் திகதி 04 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு அமைய மற்றொரு ஆசிரியரையும் உடனடியாக பாடசாலைக்கு நியமிப்பது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வலயக் கல்வி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்