ஆசிரியர்களை சிறைவைத்தனர் பெற்றோர்; நாட்டின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்களை சிறைவைத்தனர் பெற்றோர்; நாட்டின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2014 | 9:13 pm

கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சனைகளை சுட்டிக்காட்டி இன்று நாட்டின் சில பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆசிரியர் பற்றாக்குறை  உட்பட பல குறைபாடுகளை முன்வைத்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்திற்கு உட்பட்ட சூரியகந்த எக்பர்த் தமிழ் வித்தியாலயத்தில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இன்று ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

சாதாரண தரம் வரை மட்டுப்படுத்தப்பட்ட இந்த பாடசாலையில் 477 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். ஆனால், 13 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பிக்கின்றனர்.

சமயம், ஆங்கிலம், வரலாறு, சிங்களம் மற்றும் வர்த்தகம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என்பதை சுட்டிக் காட்டியே மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் 5 நாட்களும் பாடசாலையை மூடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கப் போவதாக பெற்றோர் தெரிவித்தனர்.

அதேபோன்று ஏறாவூர் – அஸ்ரப் வித்தியாலயத்தின்  பெற்றோர்களும் மாணவர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து தமது பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தினர்.
குறித்த பாடசாலைக்கு அவசர தேவையாக உள்ள ஆங்கில ஆசிரியரை முதலாம் தவணை முடிவதற்கு முன்னர் பெற்றுக் கொடுப்பதாக மட்டகளப்பு மத்திய கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் எஸ். சிறிதரன் உறுதியளித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ரிதிகம – கீழ்கொடபொல வித்தியாலயத்தை இரண்டாம் நிலை பாடசாலையாக்குவற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

5 நாட்களாகத் தொடரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் இன்று சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் ஆசிரியர்களை பாடசாலையில் சிறைவைத்து பெற்றோர்கள் பாடசாலையின் பிரதான வாயிலை மூடினார்கள்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த பொலிசார் பிரதான வாயிலின் பூட்டினை உடைத்து ஆசிரியர்களை வெளியில் அனுப்பியுள்ளார்கள்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்