மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பர்; பிரேரணை நிறைவேற்றம்

மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பர்; பிரேரணை நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 8:21 pm

ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாண சபை உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென வட மாகாண சபையில் இன்று பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இந்த யோசனையை சபையில் முன்வைத்தார்.

வட மாகாண சபையின் ஐந்தாவது அமர்வு இன்று நடைபெற்றதுடன், இதன்போது மாகாண சபை உறுப்பினர்களால் 16 பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சர்வதேசம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு வலு சேர்க்கும் பிரேரணையும் இதில் உள்ளடங்குகின்றது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமற்போன மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட கணக்கெடுப்பு தொடர்பில் நம்பிக்கை கொள்ளமுடியாதென மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றுமொரு பிரேரணையை முன்வைத்துள்ளார்.

எனவே அந்தக் கணக்கெடுப்பிற்கு மாறாக மாகாண சபையினால் சர்வதேசத்தின் மேற்பார்வையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை யுத்தகாலத்தில் வடக்கில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வட மாகாணத்தின் ஆளுங்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது.

சில யோசகைகளை சபையில் முன்வைத்த போது, எதிர்க்கட்சியினால் எதிர்ப்பு வெளியிட்டபட்டபோதிலும், சமர்ப்பிக்க்பட்ட 16 பிரேரணைகளும் சபையில் நிறைவேற்றுப்பட்டுள்ளன.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரின் கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வட மாகாண எதிர்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு இன்று சபை அமர்வுகளில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் இங்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்