தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்

தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்

தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 1:50 pm

இலங்கை  மற்றும் தமிழக மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சென்னையில் இன்று முற்பகல் ஆரம்பமாகியுள்ளது.

மீன்பிடி உரிமை மற்றும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை, இந்திய கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்  வகையில் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது

தமிழக மீன்பிடித்துறை அமைச்சர் கே ஏ ஜெயபாலுடன், இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் சுசித்ரா துரை, இலங்கை கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியராச்சி ஆகியோர்  இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தியா சார்பாக 24 மீனவர்களும், இலங்கை சார்பாக 18 மீனவர்களும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது

சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் பிரதி உயர்ஸ்தானிர் சபரூல்லா கானும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார்.

இதனிடையே, இந்தப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு தமிழக அதிகாரிகள் ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக ஆழ்கடலில் இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை கைது செய்கின்றமை, தடுத்துவைக்கின்றமை மற்றும் அவர்களது படகுகள் மற்றும் உடமைகளை கைப்பற்றுகின்றமை போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கச்சதீவு தொடர்பிலான தமது நிலைப்பாட்டினை இந்தப் பேச்சுவார்த்தையின்போதும் கடைப்பிடிப்பதாக தமிழக அதிகாரிகள், இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

கச்சதீவை அண்மித்த பகுதியில் மீன்படிப்பதற்கு தமிழக மீனவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு சார்பில் அண்மையில் விளக்கமளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்