I.C.C சட்டமூலத்திற்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சங்கம் எதிர்ப்பு

I.C.C சட்டமூலத்திற்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சங்கம் எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 10:13 am

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிர்வாக சட்டமூலத்திற்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் ஊடாக அதனை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் போல் மாஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரக்கெட் பேரவையின் புதிய நிர்வாக வியூகம் தொடர்பான சட்டமூலம், உறுப்பு நாடுகளின் நிர்வாக சபைகளுக்கு கடந்த 9 ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தது.

தனிப்பட்ட மற்றும் இரகசியமான ஆவணங்களாக வெளியிடப்பட்ட இந்த சட்டமூலத்தில் 6 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பிரிவினையை ஏற்படுத்திய இந்த சட்டமூலத்தின் ஊடாக சர்ச்சையை ஏற்படுத்திய விடயம் என்ன?

இலக்கம் ஒன்று, இரண்டாம் பிரிவு, ஐந்தாம் பக்கம்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்று குழுவின் முழுமையான மற்றும் நிலையான உறுப்புரிமைகள் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மாத்திரம் வழங்கப்படுகின்றன. அந்த குழுவின் நான்காவது, முழுமையான மற்றும் நிலையான உறுப்புரிமை, காலத்திற்கு ஏற்றவாறு நியமிக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஏனைய செயற்பாட்டு குழுக்கள், குறித்த புதிய நிறைவேற்று குழுவின் கீழ் உள்ளடங்குகின்றது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் பதவி இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுங்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மாத்திரம் உரித்தாகின்றது.

இலக்கம் இரண்டு, மூன்றாம் பிரிவு, மூன்றாவது சரத்து –

“எவ்.ரி.பி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி அட்டவணை ரத்து செய்யப்படும். இதற்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகளை ஒவ்வொரு நாடுகளும் கலந்துரையாடியே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகியன ஏனைய உறுப்பு நாடுகளுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், ஐந்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியும் என்பதுடன், அந்த சரத்து இந்தியாவிற்கு உரித்துடையதல்ல.”

இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவர் போல் மாஷ், சட்டமூலத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து இதனை குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளிடம், கிரிக்கெட் விளையாட்டின் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் விதத்தில் இந்த யோசனை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விளையாட்டின் முன்னேற்றம் காரணமாக இது முன்னெடுக்கப்பட்ட ஒரு விடயம் அல்ல. இந்த யோசனையின் ஊடாக இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் மாத்திரம் வலுவடைந்துவிடும் என்ற அச்சம் நிலவுகின்றது. அதனால் இந்த சட்டமூலத்திற்கு ஏனைய நாடுகள் தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.”

இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சட்டமூலம் எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்கிழமை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்று குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை, அதாவது 10 இல் 7 வாக்குகள் கிடைக்க வேண்டியுள்ளது.

இந்த சட்டமூலத்திற்கு இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் அதிகாரிகள் மாத்திரமே இதுவரை இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகள் குறித்த சட்டமூலத்திற்கு உத்தியோகப்பூர்வமாக தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

பங்களதேஷ் மற்றும் சிம்பாவ்பே ஆகிய நாடுகள்,இந்த சட்டமூலத்திற்கு உத்தியோகப்பூர்வமாக இதுவரை தமது கருத்துக்களை வெளியிடவில்லை.

இந்த பின்னணியில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, குறித்த சட்டமூலம் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது?

குறித்த சட்டமூலம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகப்பூர்வமாக இணக்கத்தையோ அல்லது எதிர்ப்பையோ இதுவரை தெரிவிக்கவில்லை என சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இரட்டை வேடத்தை பூண்டு சர்வதேசத்திற்கு எதிர்வரும் தினங்களில் மீண்டும்
ஒரு முறை எமது நாட்டை காட்டிக் கொடுக்க இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முயற்சிப்பதாக கடந்த 23ஆம் திகதி நிறைவேற்று குழு உறுப்பினர் ஷமிமீ சில்வா ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தமக்கு கிடைக்கின்ற டொலர்களின் எண்ணிக்கையின் பிரகாரமா? இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகள், இந்தியாவை மகிழ்விப்பதற்காக செயற்படுகின்றனர் என கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நியாயமான சந்தேகமொன்று எழுந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்