தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நாளை

தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நாளை

தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நாளை

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 5:16 pm

தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளின் விபரத்தையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை பணிப்பாளர் அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கை சார்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், சிலாபம் மற்றும் தென் பகுதி மீனவர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 10 மீனவர்களும் பங்கேற்கவுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தமிழகம் சார்பில் நாகப்பட்டினம். தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், புதுச்சேரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 12 பிரதிநிதிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதேவேளை, தமிழக அரசின் கடற்றொழில் அமைச்சர் கே.ஏ.ஜெயபால் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவும் இலங்கை கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டிஆரச்சி தலைமையிலான பிரதிநிதிகள் குழுவும் இந்த பேச்சுவார்த்தையை மேற்பார்வை செய்யவுள்ளன.

இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை இந்திய மத்திய அரசின் வெளியுறவுத்துறை இணை செயலாளர் சுசித்ரா துரை, துணை செயலாளர் மயங்க் ஜோஷி, இலங்கைக்கான இந்திய தூதரக உயர் அதிகாரி ஷிவ்தர்ஷன் சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் எனவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என ஏற்கனவே இணக்கம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்