காணாமற்போனவர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவி

காணாமற்போனவர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவி

காணாமற்போனவர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவி

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 10:36 am

காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகளின்போது கிடைத்த முறைப்பாடுகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனவர்கள் தொடர்பில் கிடைத்த 150 முறைப்பாடுகள்மீதான முதற்கட்ட விசாரணை கிளிநொச்சியில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதாக காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ கூறியுள்ளார்.

இதில் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய முறைப்பாடுகளை சட்டமாஅதிபரின் கவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்காக 150 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் 500 க்கும் மேற்பட்டவர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக அங்கு வருகைதந்தால் பிரிதொரு நாளில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட மக்களிடம் பதிவு செய்யப்பட்ட தகவல்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் மேலதிக விசாரணை தேவைப்படும் ஆவணங்களை அடுத்த வாரமளவில் சட்டமாஅதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றதும் அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்