மகாராஜா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு மீண்டும் பரிசீலனைக்கு

மகாராஜா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு மீண்டும் பரிசீலனைக்கு

மகாராஜா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு மீண்டும் பரிசீலனைக்கு

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 11:32 am

கியன்னேம் லங்கா தனியார் நிறுவனம் மற்றும் கியன்னேம் என்டபிரய்சஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக கெப்பிடல் மகாராஜா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு கொழும்பு
மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இது குறித்து ஆட்சேபனை வெளியிடுவதற்கும், பதில் வழங்குவதற்கும் மார்ச் 26 ஆம் திகதி வரை அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் கால அவகாசம் வழங்குவதாகவும் அதுவே இறுதி சந்தர்ப்பம் எனவும் நீதிமன்றம் அறிவித்தது.

நிபந்தனைகளை மீறியமை தொடர்பில் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கோரியும், வழக்குடன் தொடர்புடைய கட்டிடம் மற்றும் காணியை விற்பனை செய்தல், மற்றும் வேறு செயற்பாடுகளுக்கு பயன்படுத்தல் என்வற்றை தடுக்கும் வகையில் கியன்னேம் லங்கா தனியார் நிறுவனத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியும் கெப்பிடல் மகாராஜா நிறுவனம் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது.

கொழும்பு இரண்டு – டோஸன் வீதியில் டோஸன் கிரான்ட் என்ற பெயரில் ஆடம்பர வீட்டுத்  தொகுதியை அமைப்பதற்காக கியன்னேம் லங்கா தனியார் நிறுவனம் மற்றும் கியன்னேம் என்டபிரய்ஸஸ் ஆகிய  நிறுவனங்கள் 2006 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட கெப்பிடல் மகாராஜா நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தன.

அந்த உடன்படிக்கையின்படி குறித்த திட்டத்தை ஐந்து வருடங்களில் நிறைவு
செய்ய வேண்டும் எனவும் அந்த இரண்டு நிறுவனங்களும் அதனை உரிய காலத்தில் நிறைவேற்றவில்லையெனவும் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கெப்பிடல் மகாராஜா நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த செப்டம்பர் ஆறாம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோது கியன்னெம் லங்கா தனியார் நிறுவனத்திற்கு இடைக்கால தடை உத்தரவு அறிவித்லை விடுத்திருந்தது.

அத்துடன் கியென்னம் என்டர்பிரயிஸ் நிறுவனத்திற்கு  அழைப்பாணை விடுத்த நீதிமன்றம் கியென்னம் லங்கா தனியார் நிறுவனம் மற்றும் கியென்னம் என்டபிரய்ஸ் நிறுவனம் என்பவற்றுக்கு செப்டம்பர் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

குறித்த நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக அந்த நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நகர்த்தல் பத்திரமும் அதன் உள்ளடக்கமும் தவறானவை என  கெப்பிடல் மகாராஜா நிறுவனம் சார்பில்  ஆஜரான சட்டத்தரணி எஸ்.ஏ. பரதலிங்கம் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.

அவ்வாறு ஆட்சேபனை வெளியிட்ட பின்னர் அந்த நகர்த்தல் பத்திரம் முன்னோக்கி கொண்டு செல்லப்படவில்லை.

ஆட்சேபனை மற்றும் பதில் வழங்குவதற்கு கடந்த வருடம் ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை குறித்த இரண்டு நிறுவனங்களுக்கும் நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியது.

அதன்படி கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29 ஆம் தகிதி மீண்டும் மனு பரிசீலமைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆட்சேபனை மற்றும் பதில் வழங்குவதற்கு கியன்னேம் லங்கா தனியார் நிறுவனம் மற்றும் கியன்னேம் என்டபிரய்சஸ் நிறுவனங்கள் காலஅவகாசம் கோரியிருந்தன.

அதன்படி நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி அதாவது இன்றுவரை காலஅவகாசம் வழங்கியது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த குறித்த இரண்டு நிறுவனங்களும் ஆட்சேபனை மற்றும் பதில் வழங்குவதற்கு மீண்டும்  காலஅவகாசம் கோரியுள்ளன.

குறித்த இரண்டு நிறுவனங்களுக்கும் இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கிய மூன்றாவது தடவை இதுவென கெப்பிடல் மகாராஜா நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.ஏ பரதலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இதற்காக இறுதி தினம் ஒன்றை அறிவிக்குமாறும் கூறியுள்ளார்.

இரு தரப்பினரதும் கருத்துக்களை ஆராய்ந்த நீதிமன்றம் ஆட்சேபனை மற்றும் பதில் வழங்குவதற்கு கியன்னேம் லங்கா தனியார் நிறுவனம் மற்றும் கியன்னேம் என்டபிரய்சஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மார்ச் 26 ஆம் திகதி வரை மீண்டும் காலஅவகாசம் வழங்கியது.

மனுதாரரான வரையறுக்கப்பட்ட கெப்பிடல் மகாராஜா நிறுவனம் சார்பில் சட்டத்தரணி ஜே.சீ அருள் பிரகாசத்தின் ஆலோசனைக்கு ஏற்ப ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.ஏ. பரதலிங்கம், சட்டத்தரணி நிஸ்கான் பரதலிங்கம் மற்றும் சட்டத்தரணி நிரன்ஜன் அருள்பிரகாசம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

கியென்னம் லங்கா தனியார் நிறுவனம் மற்றும் கியன்னம் என்டர்பிரய்ஸ் நிறுவனம் சார்பில் நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்டத்தரணிகள் நிறுவனத்தின் ஆலோசனைகளின்படி பிரதிவாதிகள் தரப்பில் சட்டத்தரணி என். சிவேந்திரன் ஆஜராகியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்