கச்சதீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை – இ.ம.அ

கச்சதீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை – இ.ம.அ

கச்சதீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை – இ.ம.அ

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 2:36 pm

கச்சதீவுப் பகுதியில் மீன் பிடிப்பதற்கான உரிமை தமிழக மீனவர்களுக்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச கடல் எல்லைகளை மீறி இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசிக்கின்றமையால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதாக மத்திய அரசாங்கம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து, அவர்களை பாதுகாப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் தலைவர் எல்.டி.ஏ. பீட்டர் ராயன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்திய மத்திய அரசாங்கம் தமது விளக்கத்தை சமர்ப்பித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடல் எல்லைகள் தொடர்பாக இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையே கடந்த 1974 ஆம் மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக மத்திய அரசாங்கத்தின் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல் எல்லைப் பிரச்சினையும், கச்சத்தீவின் உரிமையும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி ஹிந்து தெரிவித்துள்ளது.

கச்சத்தீவுப் பகுதிக்கு இந்திய மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் செல்லலாம் எனவும் புனித அந்தோனியார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் இந்திய மத்திய அரசாங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது..

எனினும் கச்சதீவைச் சுற்றியுள்ள பகுதியில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு உரிமை  இல்லை என மத்திய அரசாங்கத்தின் பதில் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பதை தடுக்கும்  வகையில் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் இந்திய மத்திய அரசாங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் 27 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்