இரு நாடுகளின் இணக்கப்பாட்டை அடுத்து மீனவர்களை விடுவிக்க தீர்மானம்

இரு நாடுகளின் இணக்கப்பாட்டை அடுத்து மீனவர்களை விடுவிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2014 | 6:59 pm

உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் வகையில் இரண்டு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை பரஸ்பரம் விடுதலை செய்வதற்கு இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்திய விவசாய அமைச்சர் சரத் பவாருடன் இன்று பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் இந்தியாவிலிருந்து நியூஸ்பெஸ்டுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களுடன் அவர்களின் படகுகளையும் நாளை முதல் விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக தமிழகத்தில் மட்டுமல்லாது ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகளை விடுவிப்பது குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பிலும் இந்திய அதிகாரிகளால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் மீனவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கையின்போது சகல மாநிலங்களிலும் ஒரே வழிமுறையைப் பின்பற்றுவது தொடர்பிலான யோசனை குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்டுள்ளது.

மீனவர் பிரச்சினை தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இரண்டு நாடுகளினதும் மூன்று பிரதிநிதிகள் வீதம், ஆறு பேர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடனும், இன்று முற்பகல் தாம் உள்ளிட்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.

மீனவர்களின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் எட்டப்படும் தீர்மானங்களுக்கு இந்திய அரசின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என சல்மான் குர்ஷித் வாக்குறுதி அளித்ததாக அமைச்சர் கூறினார்.

மேலும் மன்னார்குடாவை சூழலுக்கு அமைவான பிரதேசமாக மாற்றும் செயற்பாடுகளுக்கு தேவையான நிதியுதவியை பெற்றுக்கொடுப்பதற்கும் இந்திய அரசாங்கம் விரும்புவதாக அந்தநாட்டு வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்