லயன் எயாரில் பயணித்தோரின் தடயப்பொருட்களை அடையாளங் காண இன்றும் சந்தர்ப்பம்

லயன் எயாரில் பயணித்தோரின் தடயப்பொருட்களை அடையாளங் காண இன்றும் சந்தர்ப்பம்

லயன் எயாரில் பயணித்தோரின் தடயப்பொருட்களை அடையாளங் காண இன்றும் சந்தர்ப்பம்

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2014 | 10:20 am

இரணைதீவு கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் ஏயார் விமானத்தின் பாகங்களை தேடும் பணிகளின்போது, கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட சில தடயப்பொருட்களை அடையாளங் காண்பதற்கு உறவினர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவிற்கு இன்றைய தினம் வருகைதருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கி பயணித்த லயன் ஏயார் விமானம் இரணைதீவு பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில்  விமானப் பணியாளர்கள் 7 பேரும், தமிழ் பிரஜைகள் 48 பேரும் பலியானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் எட்டு சிறுவர்களும் அடங்குகின்றனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் ஏயார் விமானத்தின் பாகங்களை தேடும் பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி பாதுகாப்பு பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது மீட்கப்பட்ட 72 வகையான தடயப்பொருட்கள் நேற்றும், நேற்று முன்தினமும் யாழ்ப்பாணம், சுப்ரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதன்போது 17 ஆடைகள் அடையாளங்காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதில் 10 பேரினது அடையாளம் மாத்திரமே உறுதி செய்யப்பட்டுள்ளது.

23 உறவினர்கள் மாத்திரமே கடந்த இரண்டு தினங்களாக வருகை தந்திருந்ததாக அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.

எனவே, கடந்த இரண்டு தினங்களாக வருகைதர முடியாதவர்கள், இன்றைய தினம் வருகைதந்து உறவினர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்