மன்னாரில் மீட்கப்பட்ட  மண்டை ஓடுகள் தமிழர்களுடையதாக இருக்கலாம் – த.தே.ம.மு

மன்னாரில் மீட்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையதாக இருக்கலாம் – த.தே.ம.மு

மன்னாரில் மீட்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையதாக இருக்கலாம் – த.தே.ம.மு

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 7:23 pm

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக் கூடுகள், இராணுவத்தினரால் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு, பின்னர் காணாமல் போன தமிழ் மக்களுடையதாக இருக்கலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்தேகம் தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மன்னார் – திருக்கேதீஸ்வரன் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி, குடிநீர் திட்டத்திற்காக, மண் அகழும் பணிகள் இடம்பெற்று கொண்டிருந்த வேளையில், இந்த மனித எச்சங்கள் முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த மனித புதைக்குழியில் சந்தேகத்துக்கு இடமான மண்டை ஓடுகள் மற்றும் மனித எச்சங்கள் காணப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி 1990 ஆம் ஆண்டுகளில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியாக இருந்துள்ளதாகவும், இராணுவ பிரிவொன்றின் கட்டளை தலைமையகமாக இருந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதனாலேயே, இந்த மனித புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித மண்டை ஓடுகள் மற்றும் மனித எச்சங்கள் இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்டு, காணாமல் போனவர்களுடையது என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுதம் தரிக்க முடியாத சிறுவர்களும் கொல்லப்பட்டிருப்பதானது, போராளிகள் என்பதற்கு அப்பால் ஒரு இனத்தின் இருப்பினை ஒட்டுமொத்தமாக அழிக்கின்ற எண்ணத்தினை கொலையாளிகள் கொண்டிருந்துள்ளமையை வெளிப்படுத்துவதாக  அதில் கூறப்பட்டுள்ளது.

எனவே இது அப்பட்டமான இனப்படுகொலையின் ஒரு அங்கம்  என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் மண்டையோடுகள், சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சர்வதேச சமூகம் யுத்தம் நடைபெற்ற இறுதி மூன்று ஆண்டுகளில் மட்டும் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடாத்தாது, நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர், இடம்பெற்ற அனைத்து குற்றங்கள் தொடர்பாகவும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்த  வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மன்னார் மனித புதைக்குழி தொடர்பாகவும், சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்