வலி. கிழக்கு பிரதேச சபையின் வரவு- செலவுத் திட்டம் மீண்டும் தோல்வி

வலி. கிழக்கு பிரதேச சபையின் வரவு- செலவுத் திட்டம் மீண்டும் தோல்வி

வலி. கிழக்கு பிரதேச சபையின் வரவு- செலவுத் திட்டம் மீண்டும் தோல்வி

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 4:27 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு- செலவுத் திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இன்று இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஒன்பது உறுப்பினர்களும், எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

இதற்கமைய மூன்று மேலதிக வாக்குகளால் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விசேட கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.

எனினும் இதன்போது திருப்திகரமான முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என தெரிவித்து இன்றைய தினம் வரவு செலவுத் திட்டம்மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதற்கமைய இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைவர் அ.உதயகுமார் நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்தார்.

இதேவேளை, பிரதேச சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் இரு தடவைகள் தோல்வியடைந்தால் அதன்  தலைவர் பதவி விலக வேண்டும் என்ற சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி நிலவும் பிரதேச சபைகள் பலவற்றின் வரவு செலவுத் திட்டங்கள் அண்மமையில் தோற்கடிக்கப்பட்டிருந்தன.

சபை தவிசாளர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளை எதிர்க்கும் வகையிலும்   தனிப்பட்ட காரணங்களுக்காகவும்  வரவு- செலவுத் திட்டத்திற்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்களும்  சில சந்தர்ப்பங்களில் வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்