யாழ்ப்பாணத்தில் கைதான ‘ஆவா குழு’ உறுப்பினர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் கைதான ‘ஆவா குழு’ உறுப்பினர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் கைதான ‘ஆவா குழு’ உறுப்பினர்களுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 10:15 am

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட  (ஆவா குழு உறுப்பினர்கள் ) 11 சந்தேகநபர்களும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கடந்த வாரம் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக பொலிஸர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் குழுவாக இணைந்து சினிமா பாணியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

21 வயதான ஒருவரே இந்த குழுவின் தலைவராக செயற்பட்டுள்ளதுடன் கைதானவர்கள் 17 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த குழுவினால் பாதிக்கப்பட்ட மக்கள் நேரிலோ, தொலைபேசி மூலமாகவே அல்லது தமது விபரங்களை வெளிப்படுத்தாது தபால் மூலமோ தெரிவிக்க முடியுமென கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் யாழ். குடாநாட்டில் எவருமே ஆயுதங்களை தூக்காத வகையில் இவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், 12 வாள்கள், கம்பிகள் மற்றும் 6 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, சுண்ணாகம், மானிப்பாய் மற்றும் அச்சுவேலி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்