போகம்பரை சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதம்

போகம்பரை சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதம்

போகம்பரை சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 3:10 pm

போகம்பரை சிறைச்சாலை கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை இரத்துச் செய்யுமாறும், ஆயுட்கால சிறைத்தண்டனையை தளர்த்துமாறும் கோரி இந்த கைதிகள் நேற்று உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுடன் நீதி அமைச்சின் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்த போதிலும், எவ்வித தீர்வுகளும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை மற்றும் ஆயுட்கால தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உட்பட சாதாரண கைதிகளும் இணைந்து 28 பேர் சிறைச்சாலை கூரை மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிடுகின்றார்.

பத்து வருடங்களில் இந்த கைதிகளின் நன்னடத்தை குறித்து ஆராய்ந்த பின்னர் ஏற்கனவே அவர்களின் தண்டனைகளும் மீளாய்வு செய்யப்பட்டிருந்தன.

ஆயினும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் எந்தவிதமான மீளாய்வும் இடம்பெறுவதில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதேவேளை, போகம்பரை சிறைச்சாலையின் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் வினயபோது, அவர்கள் தமது உண்ணாவிரதத்தை கைவிடும் பட்சத்தில் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை குறித்து கவனம் செலுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்