தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி பாம்பனில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி பாம்பனில் கண்டன ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 3:05 pm

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி பாம்பனில் மீனவர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் அதிகமான மீனவர்களும், பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டதாக “தி இந்து” தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக 256 தமிழக மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் 81 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கண்டிக்கும் வகையிலும், மீனவர் பிரச்சினை தொடர்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி பாம்பனில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமது மீனவர்களை விடுவிக்கும் விடயத்தில் மத்திய அரசு மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராமேஸ்வரம் மற்றும் பாம்பன், நாட்டுப்படகு மீனவர்கள் இதன்போது கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, பாரம்பரியமாக மீன்பிடியில் ஈடுபடுகின்ற தமக்கு கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதுடன், இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களும், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதவிர அரச தரப்பில் சென்னையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை குறித்து தமிழக மற்றும் இலங்கை மீனவ பிரதிநிதிகளுக்கு இன்னும் அதிகாரபூர்வமாக தகவல் வழங்கப்படவில்லை என்று இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக மீனவர்கள் விடுதலை கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் தெரிவித்ததாக “தி இந்து” மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்