வவுனியா தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு

வவுனியா தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு

வவுனியா தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 2:28 pm

வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் சில பஸ்கள் பரந்தன் சந்தியில் இன்று காலை இடைமறிக்கப்பட்டதாக அந்த சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வவுனியாவில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வழமையான மார்க்கத்தில் பரந்தன் ஊடாக பயணிகளுடன் சென்றிருந்த தமது பஸ்கள் பரந்தன் சந்தியில் இடைமறிக்கப்பட்டதுடன், பஸ்களில் இருந்து பயணிகளும் வெளியேற்றப்பட்டதாக வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.சீ.கே. ராஜேஸ்வரன் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள் கம்பனியின் கீழ் பதிவுசெய்யப்பட்டு,  போக்குவரத்தில் ஈடுபடும் சில பஸ்கள், மார்க்க அனுமதியை மீறி வேறு மார்க்கங்கங்களின் ஊடாக, சேவையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடஇலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க ஒன்றியத்தினால் பரந்தன் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டவர்களுடன், கிளிநொச்சி மாவட்ட அரசஅதிபர் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடல்களையும் நடாத்தியிருந்தனர்.

எனினும், பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாணத்தின் வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டத்திலிருந்தும், பிறமாவட்டங்களுக்கான தனியார் பஸ் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களிலும், உள்ளூர் தனியார் பஸ் சேவைகள் எவ்வித பாதிப்புமின்றி நடைபெற்றதாக வடஇலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கங்களின் ஒன்றியத்தின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மீள்குடியேற்றப்பட்ட காலப்பகுதியில் மக்களுடைய போக்குவரத்து நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு வவுனியா மாவட்ட அரச அதிபரால் வழங்கப்பட்ட மார்க்க அனுமதிப்பத்திரத்திற்கு அமையவே, தாம் சேவையில் ஈடுபட்டு வருவதாக வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.சி.கே. இராஜேஸ்வரன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்திருந்தார்.

வவுனியாவிலிருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த சில பஸ்கள் மீது பரந்தனில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் பொலிஸ் பாதுகாப்புடன் பஸ்கள் சேவையில் ஈடுபட்டதாகவும் எமதுசெய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்