வதுரவ ரயில் விபத்து; விசாரணைகள் ஆரம்பம்

வதுரவ ரயில் விபத்து; விசாரணைகள் ஆரம்பம்

வதுரவ ரயில் விபத்து; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 9:55 am

வெயாங்கொடை, வதுரவ பகுதியூடாக பயணித்த ரயிலின் என்ஜினில் தீ பரவியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.

இதன்பொருட்டு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் ​தெரிவித்தார்.

Kandy-Train-Fire-in-Wadurawa-newsfirst-7
ரம்புக்கனையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தீ விபத்து இலக்கான ரயிலை, கொழும்பிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் பின்னர் தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் முன்னெக்கப்பட உள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.
Kandy-Train-Fire-in-Wadurawa-newsfirst-6
இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த மற்றும் காயங்களுக்குள்ளானவர்கள் குறித்து தகவல்களை திரட்டுவதற்காக போக்குவரத்து பரிசோதகர் ஒருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து பிரிவின் உதவி பொறியியலாளர் ஒருவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெயாங்கொடை, வதுரவ பகுதியில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் மூவர் உயிரிழந்திருந்தனர்.

இவர்களில் பெண் ஒருவரும் அடங்குகின்றார்.

சம்பவத்தில் தம்பதியினரும், மற்றுமொரு இளைஞனும் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்று நடத்தப்படவுள்ளன.

மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில், நேற்று மாலை 6.50 அளவில் வதுரவ ரயில் நிலையத்திற்கு அருகில் என்ஜினில் திடீரென தீ பரவியதை அடுத்து ஏற்பட்ட நிலைமையே இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்திருந்தது.

Kandy-Train-Fire-in-Wadurawa-newsfirst-3

தீ பரவியதை அடுத்து பீதியடைந்த பயணிகள் சிலர் ரயிலில் இருந்து வெளியே குதித்தபோது, பொல்கஹாவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி பலத்த காயங்களுக்கு உள்ளானார்கள்.

காயமடைந்த நிலையில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் மூவர் உயிரிழந்ததாக அந்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் சிசிர விஜேசுந்தர தெரிவித்தார்.

Kandy-Train-Fire-in-Wadurawa-newsfirst-2
இதேவேளை, பிரதான மார்க்கம் ஊடான ரயில் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

உரிய நேர அட்டவணைக்கு அமைவாக ரயில் போக்குவரத்துகள் இடம்பெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்