இரு நாட்டு மீனவர்களையும் புரிந்துணர்வின் அடிப்படையில் விடுதலை செய்க – ரி.ஆர்.பாலு

இரு நாட்டு மீனவர்களையும் புரிந்துணர்வின் அடிப்படையில் விடுதலை செய்க – ரி.ஆர்.பாலு

இரு நாட்டு மீனவர்களையும் புரிந்துணர்வின் அடிப்படையில் விடுதலை செய்க – ரி.ஆர்.பாலு

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 7:04 pm

இலங்கை – இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்களும்,  புரிந்துணர்வு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் யோசனையொன்றை முன்வைத்துள்ளது.

இதற்கமைய இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின்றபோது தமிழக சிறைச்சாலைகளில் உள்ள இலங்கை மீனவர்களையும் ஒரே தடவையில் விடுதலை செய்யுமாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ரி.ஆர்.பாலு இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு சென்றுள்ள ரி.ஆர்.பாலு, தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இந்த  விடயத்தை தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் பண்டிகைக்கு முன்னர் இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமது கோரிக்கை தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷிட் உறுதியளித்ததாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்றக் குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனுடனும் ரி.ஆர்.பாலு கலந்துரையாடியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் 227 பேர் இலங்கை சிறைகளிலும், இலங்கை மீனவர்கள் 213 பேர் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் ஏனைய பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளிலும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன விரைவில் இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார்.

இரு நாட்டு மீனவர்களையும் ஒரே சந்தர்ப்பத்தில் விடுதலை செய்வது தொடர்பில் திராடவிட முன்னேற்றக்கழகத்தின் பாராளுமன்றக் குழுத் தலைவர் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் நியூஸ் பெர்ஸ்ட் வினவியது.

அமைச்சர் ராஜித்த தெரிவித்த கருத்து :-

“அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு சென்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளேன். இரு தரப்பு மீனவர்களை பறிமாறிக்கொள்வது தொடர்பிலான கருத்தையே ரி.ஆர்.பாலு அவர்கள் ஹிந்து பத்திகைக்கு தெரிவித்துள்ளார். உண்மையிலேயே நானும் இது தொடர்பில் செயற்பட்டேன். . நாம் மீனவர்களை விடுதலை செய்வதாக இருந்தால் மறுபுறம் அவர்களும் எமது மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். மீனவர்களுடன் எமக்கு பிரச்சினை இல்லை. தற்போது எமது  மீனவர்கள் 201 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் 227 பேர் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது 77 படகுகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்