தேவ்யானியின் ஐ.நா தூதுவர் பதவிக்கு அங்கீகாரம் கோருகிறது  இந்தியா

தேவ்யானியின் ஐ.நா தூதுவர் பதவிக்கு அங்கீகாரம் கோருகிறது இந்தியா

தேவ்யானியின் ஐ.நா தூதுவர் பதவிக்கு அங்கீகாரம் கோருகிறது இந்தியா

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2013 | 8:13 pm

அமெரிக்காவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதி கொன்சூலர் நாயகம் தேவ்யானியின் ஐ.நா தூதுவர் பதவிக்கு அங்கீகாரம் கோரி பான் கீ மூனுக்கு இந்தியா கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதுவராக தேவ்யானி கோப்ரகடேயை இந்தியா அண்மையில் நியமித்திருந்தது.

விசா மோசடி மற்றும் தவறான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் பொது இடத்தில் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்ட தேவ்யானி ஆடை களையப்பட்டு உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் வெளியிட்ட இந்தியா, இதற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், தேவ்யானி மீதான வழக்கை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தது.

எனினும் இந்தியாவின் கோரிக்கைகளை அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்துள்ள நிலையில், இரு தரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தேவ்யானிக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதிகள் குழு அலுவலகத்திற்கு இந்திய அரசு பணி இடமாற்றம் செய்திருந்தது.

இதனிடையே இந்தியாவின் கோரிக்கை ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் பிரகாரம் பரிசீலிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பணிப்பெண் வழங்கிய முறைபாட்டில் கைது செய்யப்பட்ட தேவ்யானி, ஐ.நா தூதுவர் பணிக்கு மாற்றப்பட்டுள்ளமை அவருக்கு சட்டப் பாதுகாப்பு வழங்காது என அமெரிக்கா கூறியுள்ளது.

அத்துடன் தேவ்யானிக்கு எதிராக வழக்கு வாபஸ் பெறப்பட மாட்டாது என்பதுடன், அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமெரிக்கா மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்