ஆரையம்பதியில் இரு கோயில்களில் கொள்ளை; விசாரணைகள் ஆரம்பம்

ஆரையம்பதியில் இரு கோயில்களில் கொள்ளை; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2013 | 7:19 pm

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இரண்டு கோயில்கள் உடைக்கப்பட்டு, உண்டியல்களில் இருந்த பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பிரதேசத்திலிருந்து அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபரை கைதுசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 300 வருடங்கள் பழமைவாய்ந்த ஆரையம்பதி எள்ளிச்சேனை பிள்ளையார் ஆலயம் மற்றும் 100 வருடங்கள் பழமை வாய்ந்த ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம் என்பனவே இன்று அதிகாலை உடைக்கப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபைத் தலைவர் பூபாலசிங்கம் புஸ்பராசா தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் வருடாந்த உற்சவம் நடைபெறும் காலப் பகுதியில் உண்டியல் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம் நிருவாகத்திடம் சேர்க்கப்படுவதே இந்த ஆலயங்களின் வழக்கம் என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த சில மாதங்களாக வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்கள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்களும்  பணமும்  கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்