வரவு-செலவுத்திட்டம் 2014; மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு-செலவுத்திட்டம் 2014; மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு-செலவுத்திட்டம் 2014; மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2013 | 5:58 pm

2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 55 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டிருந்தன.

வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் இன்று நிறைவு பெற்றதை அடுத்து இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்..

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தின் இன்று தனிப்பட்ட தெளிவூட்டலொன்றை வழங்கியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே அமைச்சர் இந்த தெளிவுபடுத்தலை மேற்கொண்டுள்ளார்

ரம்புக்வெல்ல மன்றம் எனும் பெயரில் எவ்வித அமைப்பும் இல்லை என தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர், அந்த அமைப்பினால் பணம் அறவிடப்பட்டமைக்கான பற்றுசீட்டு சமர்ப்பிக்கப்பட்டால் அமைச்சர் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறப்பதற்கு தயார் என தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துக்கள் போலியானது என நிரூபிக்கப்பட்டால் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கை என்னவென்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல சவால் விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சபாநாயகர் சமல் ராஜபக்ஸ, சபை நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாவசியமான குற்றச்சாட்டுக்களை தவிர்ப்பதே உகந்தது என கூறியுள்ளார்,.

பாராளுமன்றத்தில் இன்றைய குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தேசிய பொருளாதாரமொன்றை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, 2016 ஆம் ஆண்டளவில் அரச கடன் வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்க கடனை 65 வீதம் வரை குறைக்கும் இலக்குடனேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் ஆராயப்பட வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியினர் எத்தகைய கருத்துக்களை முன்வைத்தாலும் இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டுவருவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டில் சுகாதார துறைக்கு 155 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்

இதன்போது உரையாற்றிய ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க,  பொருளாதார நெருக்கடிக்கு சிறு குழுவினரே பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்

ஒருசிலர் மாத்திரம் பொருளாதாரத்தை நிருவகிப்பதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் இந்த நிலைமை குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் விவசாயிகளுக்கான உர மானியத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சபையில் இன்று தெரிவித்துள்ளார்

இதனிடையே ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றின் ஊடாக ஆராயப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷீமும் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்

இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டிலான் பெரேரா, அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி அதனை ஏற்றுக்கொள்ளாது, மக்கள் ஆணையால் தெரிவான அரசாங்கத்தை குறை கூறிவருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன உரையாற்றுகையில், இம்முறை வெற்று வரவு செலவுத் திட்டமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் குற்றச்சாட்டுக்களை பிரதமர் டி.எம்.ஜயரத்ன பாராளுமன்றத்தில் இன்று நிராகரித்துள்ளார்.

இம்முறை மிகவும் சிறந்தவொரு வரவு செலவுத் திட்டமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க கூறியுள்ளார்.

நாட்டில் தொழில் புரிவோரின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் பதிலுரையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்