பாராளுமன்றத்தில் இன்று

பாராளுமன்றத்தில் இன்று

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 7:51 pm

அரசாங்கம் சட்டத்தை அனைவருக்கும் ஒரே விதத்தில் அமுல்படுத்துவதில்லை
என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவிக்கின்றார்.

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்த அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டின் சில  பாடசாலைகளுக்கு சீருடைகளும் பாடப் புத்தகங்களும் கிடைப்பதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண பாராளுமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.

மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னதாக அடுத்த ஆண்டுக்கான சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட வேண்டியிருந்தாலும் ஒரு சில பாடசாலைகளில் அந்த நடவடிக்கையை பூரணப்படுத்த முடியாமற்போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நிறைவுபெறுவதற்கு முன்னதாக நாட்டிலுள்ள அனைத்து வலயக் கல்விப் பணிமணைகளுக்கும் பாடப் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சீருடைகளை விநியோகிக்கும் பொறுப்பு கல்வி சேவைகள் அமைச்சுக்கே உள்ளதென அமைச்சர் தெரிவித்தார்.

சீருடை விநியோகிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி  சேவைகள் அமைச்சு தமக்கு அறிவித்துள்ளதாகவும் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்துள்ளார்.

இதில் ஏதேனும் குறைபாடுகள் இடம்பெற்றிருக்குமாயின் அது குறித்து ஆராய்வதாகவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ, நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையும் மூன்று இலட்சத்து 76 ஆயிரம் ரூபா கடன் சுமையுடனேயே பிறப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது விசேட செயற்றிட்ட அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன குறுக்கிட்டபோது சபையில் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டிருந்தன.

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இன்றைய விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும, கூட்டுறைவு துறையில் அரசியல் தலையீடு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய தலையீடுகளை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர் ஹேமால் குணசேகர, பண்டிகை காலத்தில் எந்தவொரு அத்தியாவசிய உணவுப் பொருளின் விலையும் அதிகரிக்கப்படமாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்