நெல்சன் மண்டேலா இயற்கை எய்தினார்

நெல்சன் மண்டேலா இயற்கை எய்தினார்

நெல்சன் மண்டேலா இயற்கை எய்தினார்

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2013 | 8:50 am

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் காலமானார்.

நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா ஜொஹனஸ்பேர்க்கில் காலமானதாக தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களாக நெல்சன் மண்டேலாவுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்தன.

சிறந்த புதல்வர் ஒருவரை நாடு இழந்துள்ளதாகவும் ஜேக்கப் சூமா தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

மண்டேலாவின் மறைவை முன்னிட்டு தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் தென் ஆபிரிக்க மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூரண அரச மரியாதையுடன் அன்னாரின் மரணச் சடங்குகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் ஜேக்கப் சூமா குறிப்பிட்டுள்ளார்.

நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி உலக தலைவர்கள் பலர் அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.

எந்தவொருவரும்  எண்ணிப்பார்க்க முடியாத பல இலக்குளை எட்டிய ஒரு சிறந்த மனிதரை உலகம் இழந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றால் ஈர்க்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களில் தானும் ஒருவர் என பரக் ஒபாமா கூறியுள்ளார்.

இதேவேளை உன்னதமான விளக்கொன்றை இந்த உலகம் இழந்துள்ளது என்று  பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரன் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1918 ஆம் ஆண்டு பிறந்த நெல்சன் மண்டேலா, 1943 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்துகொண்டார்.

மக்கள் போராட்டங்களுக்காக 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த நெல்சன் மண்டேலா 1990 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்ததார்.

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற நெல்சன் மண்டேலா தென் ஆபிரிக்காவுக்கு மாத்திரமின்றி, முழு உலகிற்கும் பொருத்தமான ஒரு தலைவராக வரலாற்றில் இடம்பிடித்தார்

இன ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடி தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நெல்சன் மண்டேலா, அந்த நாட்டின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்ற பெருமைக்கும் உரியவராகின்றார்..

நெல்சன் மண்டேலா 1993 ஆம் ஆண்டு  சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்றிருந்தார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா பொது வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்