13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில மாற்றமில்லை – ப.சிதம்பரம்

13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில மாற்றமில்லை – ப.சிதம்பரம்

13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில மாற்றமில்லை – ப.சிதம்பரம்

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 7:32 pm

இந்திய – இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இலங்கையின் 13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமென்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என  மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

”இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும்” என்ற தலைப்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்ததாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் உண்மையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் இலங்கையிடம் வலியுறுத்தி வருவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியா கொண்டுள்ள நிலைப்பாடு காரணமாக மேலும் சில நாடுகளும் அத்தகைய விசாரணையை தற்போது வலியுறுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரைகாலமும் இத்தகைய விசாரணை தொடர்பில் கருத்து வெளியிடாதிருந்த பிரித்தானிய பிரதமர் டேவின் கெமரன் அண்மையில் வெளியிட்ட கருத்து, இந்திய இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என ப.சிதம்பரம் தெரிவித்தாக பி.பி.சி.குறிப்பிட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது பாரதீய ஜனதா கட்சி அதற்கு ஆதரவு தரவில்லை என குறிப்பிட்ட அவர்,  அந்தக் கட்சியின் தமிழக தலைவர்கள் இலங்கை தமிழர்கள் மீது போலியான கரிசனையை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும்  தமிழ் மக்கள் அவர்களது  உரிமைகளை  முழுமையாக பெறுவதற்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்