மசகு எண்ணெய் கொள்வனவுக்கான தடையை தளர்த்தியது அமெரிக்கா

மசகு எண்ணெய் கொள்வனவுக்கான தடையை தளர்த்தியது அமெரிக்கா

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 11:25 am

ஈரானுடனான மசகு எண்ணெய் கொள்வனவு தொடர்பாக இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

விதிக்கப்பட்டிருந்த தடையை உரிய வகையில் பின்பற்றியமையினாலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

ஈரான் அணுசக்தி செயற்பாடுகள் குறித்து ஏற்பட்ட பிரச்சினையின் பின்னர், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அதிகாரம் தொடர்பான சட்டமூலத்தின் பிரகாரம் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஈரானுடன் எண்ணெய் மற்றும் எண்ணெய் அல்லாத கொள்வனவுகளுடன் தொடர்புடைய வங்கிகளுடன்
அமெரிக்க மத்திய வங்கி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதை குறைத்துக் கொண்டது.

இந்த தடையை 180 நாட்களுக்கு பின்னர் மீளாய்வு செய்வதற்கு, குறித்த சட்டமூலத்தின் ஊடாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை, மலேசியா, தென்னாபிரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் குறித்த காலத்திற்குள்
ஈரானிலிருந்து மசகு எண்ணெயை கொள்வனவு செய்யப்படாமையால் விதிக்கப்பட்டிருந்த தடையை
தளர்த்துவதாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் குறித்த தடை மீதான தளர்வுத்தன்மை குறித்து இன்னும் உறுதியான தெளிவு காணப்படவில்லையென பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமெரிக்கா உட்பட ஐரோப்பிய ஒன்றியம் ஈரானிலிருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு குறித்த தடையை விதித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் குறித்த தடை மீதான தளர்வுத்தன்மை தொடர்பாக அமெரிக்க தூதரகத்தில் விளக்கம் கோரியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்