வரவு-செலவுத்திட்டம் 2014; மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு-செலவுத்திட்டம் 2014; மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு-செலவுத்திட்டம் 2014; மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2013 | 5:30 pm

வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் சற்று நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 55 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டன.

இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் காங்கேசன்துறை பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான  விவாதத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடமாகாண முதலமைச்சருக்கு, மாகாணத்திலுள்ள எந்த ஒரு பகுதிக்கும் செல்வதற்கான உரிமை உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அதற்கான சட்ட ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், முதலமைச்சர் எவரிடமும் அனுமதிப் பெற வேண்டிய தேவை இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இன்றைய விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

நாடு மென்மேலும் கடன் வலைக்குள் சிக்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடுகையில், மக்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான எவ்வித வரிகளும் அறவிடப்படவில்லை என கூறியுள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கான செலவுகளை ஈடுசெய்யும் நோக்கில் வரி அறவிடப்படுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டினையும் அமைச்சர் நிராகரித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டம் என்பது நிவாரணப் பொதியல்ல எனவும் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் இசெட் புள்ளி சர்ச்சை தொடர்பில் சபையில் இன்று மீண்டும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, இசெட் புள்ளி சர்ச்சையின்போது உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாவிலாறில் அறுவடை பாதிக்கப்பட்டமை தொடர்பில் நட்டஈடு வழங்கும் நடவடிக்கையில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எயிட்ஸினால் 307 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய வருமானத்தில் 7 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேஷன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரை நிகழ்த்திய வேளையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்