தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை – ராஜித்த சேனாரத்ன

தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை – ராஜித்த சேனாரத்ன

தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை – ராஜித்த சேனாரத்ன

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2013 | 7:47 pm

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுவது நியாயம் என்றால் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்படுவது அநீதியாகுமா  என கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தமிழக முதலர்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுவதால் மீனவக் குடும்பங்கள் அநாதரவாவதாக கூறும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம்,    தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 154 இலங்கை மீனவர்களின் குடும்பங்கள் நிர்கதியாவது தொடர்பில் பாராமுகமாக உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களுக்கு தமிழக முதல்வரின் அழுத்தங்களால் உணவு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை தூதரக அதிகாரிகள் சிறையிலுள்ள இலங்கை மீனவர்களை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை ஜெயலலிதா ஜெயராமின் அதிகாரிகள் நிராகரித்துவருவதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை மீனவர்களுக்கு தேவையான உணவுக்காக கடற்றொழில் திணைக்களம் சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்திற்கு பணத்தை அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களுக்கு உணவு உள்ளிட்ட ஏனைய வசதிகளை இலங்கை பெற்றுக்கொடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் கிழக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களினதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்திய கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் ஆறு இலங்கை மீனவர்களை அந்த நாட்டு கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்