சுகாதார ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பை இடைநிறுத்துமாறு கொழும்பு நீதிமன்றம் தடையுத்தரவு

சுகாதார ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பை இடைநிறுத்துமாறு கொழும்பு நீதிமன்றம் தடையுத்தரவு

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2013 | 7:52 pm

16 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்த அடையாள பணிபகிஷ்கரிப்பை கைவிடுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்றுவரும் இதய நோயாளியொருவர் தாக்கல் செய்திருந்த மனுவை கவனத்திற்கொண்டு நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமக்கு உரித்தற்ற வசதிகளை வழங்குமாறு கோரி சுகாதார ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனால் மனுதாரரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த விடயங்களை ஆராய்ந்த மாவட்ட நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, பணிபகிஷ்கரிப்பு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவு இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என தாதியர், தகுதிகாண் மற்றும் தற்காலிக வைத்திய ஊழியர்களின் ஒருங்கிணைந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்ப்பு கிடைத்ததன் பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்